search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த வீடு.
    X
    கொள்ளை நடந்த வீடு.

    ஸ்ரீமுஷ்ணம் அருகே வியாபாரி வீட்டில் ரூ.10 லட்சம் நகை கொள்ளை

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வியாபாரி வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டை வடக்கு பாளையம் பொட்டக்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45). இவரது மனைவி பழனியம்மாள் (37). இவர்களுக்கு காயத்ரி செல்வி என்ற மகள் உள்ளார். இவர் உளுந்தூர்பேட்டையில் தங்கி படித்து வருகிறார்.

    மாரியப்பன் அவரது வீட்டுக்கு அருகில் குடோன் ஒன்று அமைத்து மிக்சர் உள்பட பல்வேறு தின்பண்டங்களை தயாரித்து வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலை மாரியப்பன் வியாபாரம் தொடர்பாக மதுரைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மகளை பார்ப்பதற்காக பழனியம்மாள் உளுந்தூர்பேட்டைக்கு செல்வதற்காக வீட்டை பூட்டினார். ஆனால் கதவில் இருந்த சாவியை எடுக்க மறந்து சென்று விட்டார். பின்னர் வெளிகேட்டை பூட்டி விட்டு புறப்பட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் மாரியப்பன் வீட்டின் மெயின் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அதனை தொடர்ந்து வீட்டின் முன்பக்க கதவில் இருந்த சாவியால் கதவை திறந்து வீட்டுக்குள் புகுந்தனர்.

    பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 40 பவுன் நகையை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.


    வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடக்கிறது.

    இந்த நிலையில் மகளை பார்க்க உளுந்தூர்பேட்டை சென்றிருந்த பழனியம்மாள் மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்தார். உள்ளே சென்ற அவர் வீட்டின் கதவும் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டுக்குள் சென்று பார்த்த போது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் நகையும் கொள்ளை போய் இருந்தது.

    இது குறித்து பழனியம்மாள் தனது கணவர் மாரியப்பனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக ஊர் திரும்பினார். மேலும் இது தொடர்பாக பழனியம்மாள் சோழத்தரம் போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் கடலூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு பின்புறம் உள்ள வயல்வெளி வழியாக சிறிது தூரம் ஓடி சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர்.

    கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
    Next Story
    ×