search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எண்ணூர் துறைமுகத்துக்கு மலேசிய ஆற்று மணல் மேலும் 52 ஆயிரம் டன் வருகை
    X

    எண்ணூர் துறைமுகத்துக்கு மலேசிய ஆற்று மணல் மேலும் 52 ஆயிரம் டன் வருகை

    எண்ணூர் துறைமுகத்துக்கு நேற்று கப்பல் மூலம் 52 ஆயிரத்து 68 மெட்ரிக் டன் மலேசிய ஆற்று மணல் கொண்டு வரப்பட்டு பொது மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டது. #EnnorePort
    சென்னை:

    புதுக்கோட்டயை சேர்ந்த தனியார் நிறுவனம் வெளிநாட்டில் இருந்து கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் 55 ஆயிரம் டன் ஆற்று மணலை தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்தது. அந்த மணலை விற்க தமிழக அரசு தடை விதித்தது.

    இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தனியார் நிறுவனம் இறக்குமதி செய்த ஆற்று மணலை தமிழக அரசு விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க தேவை ஏற்பட்டால் வெளிநாடுகளில் இருந்து ஆற்று மணலை அரசே இறக்குமதி செய்து பொதுப்பணித்துறை மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும் என்று தமிழக அரசு அறிவித்தது.

    இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து ஆற்று மணலை தனியார் நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்து பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்க டெண்டர் விடப்பட்டது. இதில் ஐதராபாத் மதன்பூரை சேர்ந்த இன்ரிதம் எனர்ஜி நிறுவனம் மணல் இறக்குமதி செய்து ஒப்படைக்க தேர்வு செய்யப்பட்டது. முதல் கட்டமாக சுமார் 3 லட்சம் மெட்ரிக்டன் ஆற்று மணலை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 21-ந்தேதி முதல் கட்டமாக 56 ஆயிரத்து 750 மெட்ரிக்டன் மணல் மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் எண்ணூர் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பொதுப்பணித்துறை மூலம் 4.5 டன் கொண்டு 1 யூனிட் மணல் ரூ.10 ஆயிரத்து 350 என்ற வகையில் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதையடுத்து மீண்டும் கப்பல் மூலம் 52 ஆயிரத்து 68 மெட்ரிக் டன் மலேசிய ஆற்று மணல் கப்பல் மூலம் எண்ணூர் துறைமுகத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. கடல் சீற்றம் காரணமாக மணலை கப்பலில் இருந்து இறக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மணலை இறக்கும் பணி நாளை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த மணலை பொதுமக்களுக்கு நேரடியாக விற்கும் நடவடிக்கையில் பொதுப்பணித்துறை ஈடுபட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் இணையதளம் மூலம் பதிவு செய்து மணலுக்கான தொகையை செலுத்திய பிறகு தாங்களே லாரிகளை ஏற்பாடு செய்து மணலை ஏற்றிச் செல்லலாம். #EnnorePort
    Next Story
    ×