search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் 10 லட்சம் தென்னை மரங்கள் சேதம்- நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
    X

    டெல்டா மாவட்டங்களில் 10 லட்சம் தென்னை மரங்கள் சேதம்- நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

    டெல்டா மாவட்டங்களில் 10 லட்சம் தென்னை மரங்கள் முறிந்து சேதமாகி உள்ளது. அவற்றிற்கு போதுமான நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Gaja
    தஞ்சாவூர்:

    கஜா புயல் தாக்கியதில் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்து சேதமாகி உள்ளன. நாகை மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா, தாளடி பயிர்கள் கடும்புயல் காற்றில் சிக்கி சேதமாகி விட்டன. மேலும் பண பயிரான மா, தென்னை, முந்திரி உள்பட 5 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்வி குறியாக மாறி உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 35 ஏக்கரில் சூழ் பிடிக்கும் பருவத்தில் இருந்த நெற்பயிர்கள் சேதமாகி விட்டன. மேலும் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் பகுதியில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் முறிந்து சேதமாகி விட்டன. மேலும் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகி விட்டன. 36 துணை மின்நிலையங்கள் செயல்பட முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன.

    திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்து விட்டன. மேலும் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழைகள் முறிந்து சேதமாகிவிட்டன. கஜா புயலில் நெல், தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சேதமாகி விட்டதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:-

    கடந்த சில ஆண்டுகளாக பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் நெல் பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு போதிய தண்ணீர் கிடைத்து சம்பா பயிர்கள் சூழ்பிடிக்கும் நிலையில் புயல் வந்து பயிர்களை அழித்து விட்டது. இதுபட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்பது போல் ஆகி விட்டது.



    தென்னை மரங்கள் எங்கள் வாழ்வாதாரமாக இருந்து வந்தது. 5 ஆண்டுகள் கண்ணைபோல் பாதுகாத்து பிள்ளைகள் போல் அவைகளை பராமரித்து வந்தோம். ஆனால் ஒரு நாள் வீசிய புயலில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் முறிந்து விட்டன. அவைகளை மீண்டும் வளர்த்து விளைச்சலுக்கு கொண்டு வருவது சாதாரண செயல் அல்ல. தென்னை மரங்கள் முறிந்ததால் கனிசமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் 10 லட்சம் தென்னை மரங்கள் முறிந்து சேதமாகி உள்ளது. இதனை அரசு கவனத்தில் கொண்டு புயலில் முறிந்து போன தென்னை மரங்களை கணக்கிட்டு மரத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் விதம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் நெல், வாழை, கருப்பு உள்ளிட்ட பயிர் சேதத்துக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×