search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் டாஸ்மாக் குடோனில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
    X

    கரூர் டாஸ்மாக் குடோனில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

    தீபாவளி பண்டிகை யையொட்டி மாமூல் வசூலில் ஈடுபடுவதாக வந்த புகாரையடுத்து கரூர் டாஸ்மாக் குடோனில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.67 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
    கரூர்:

    தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தீபாவளி பண்டிகை யையொட்டி மாமூல் வசூலில் ஈடுபடுவதாக வந்த புகாரையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கரூரில் உள்ள டாஸ்மாக் குடோனில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    கரூர் சணபிரட்டி தொழிற்பேட்டை வளாகத்தில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் உள்ளது. இதனையொட்டியவாறே டாஸ்மாக் குடோன் செயல்படுகிறது. இங்கிருந்து தான் கரூர் மாவட்டத்தில் உள்ள 96 டாஸ்மாக் கடைகளுக்கும் விற்பனைக்காக, மதுபாட்டில்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. 

    தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி குடோனில் இருப்பில் உள்ள மது வகைகளை விற்பனைக்காக டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று இரவு முதல் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. 

    இந்த நிலையில் திடீரென அங்கு சென்ற, கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுலோச்சனா, ரத்தினவள்ளி உள்ளிட்ட போலீசார், டாஸ்மாக் குடோனுக்குள் புகுந்து அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது தொழிற்பேட்டையின் முன்புற கதவினை போலீசார் இழுத்து பூட்டினர். சரக்கு வாகனங்களில் மதுபாட்டில்கள் ஏற்றும் பணியும் நிறுத்தப்பட்டது.

    தீபாவளி பண்டிகையையொட்டி மதுவகைகள் ஏதேனும் பதுக்கப்பட்டு ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் விற்கப்படுகிறதா?, கணக்கில் வராத பணம் ஏதும் புழக்கத்தில் இருக்கிறதா? என பல்வேறு கோணங்களில் துருவி துருவி போலீசார் விசாரித்தனர். இரவு நீண்ட நேரமாக நடந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் கணக்கில் வராத ரூ.67 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து குடோன் பணியாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×