search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    10 பெண்களை காப்பாற்றிய விவசாயி ரஜினி.
    X
    10 பெண்களை காப்பாற்றிய விவசாயி ரஜினி.

    உயிரை பணயம் வைத்து 10 பெண்களை காப்பாற்றிய விவசாயி

    பவானி ஆற்றை கடக்க முயன்றபோது ஆற்றில் சிக்கிய 10 பெண்களை காப்பாற்றிய விவசாயியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். #BhavaniRiver
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலத்து கோம்பை கிராமத்தை சேர்ந்த பெண்கள் சத்தி அருகே உள்ள அரியப்பம்பாளையத்துக்குச் சென்று வயலில் நெல் நடவு பணியில் ஈடுபட்டு வந்தார்கள்.

    இவர்களின் ஊரின் குறுக்கே பவானி ஆறு செல்கிறது. ஆற்றில் தண்ணீர் குறைவாக செல்வதால் முதல் நாளில் எளிதில் ஆற்றை கடந்து சென்று விட்டனர். நேற்று காலையிலும் 13 பெண்கள் அரியப்பம்பாளையம் வந்து பணி முடித்து ஊருக்கு புறப்பட்டனர்.

    முதல் நாளில் சென்றதுபோல் நேற்று மாலையும் பவானி ஆற்றை கடந்து சென்று விடலாம் என 13 பெண்களும் பவானி ஆற்றில் இறங்கி கடக்க முயன்றனர். ஆற்றின் மத்தி பகுதிக்கு சென்றபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    நேற்று பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது. இது தெரியாமல் ஆற்றைக் கடந்த பெண்கள் தண்ணீரில் சிக்கினர். மத்திய பகுதிக்கு சென்ற அவர்கள் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

    இதனால் அந்த பெண்கள் கூக்குரலிட்டனர் ‘‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’’ என அபயக் குரலிட்டனர். அவர்களின் குரல் கேட்டு ஆலத்துகோம்பை ஊரைச் சேர்ந்த ரஜினி (40) என்ற விவசாயி ஓடி வந்து ஆற்றில் சிக்கிய பெண்களை துணிச்சலுடன் ஆற்றில் குதித்து காப்பாற்றினார். தண்ணீரில் தத்தளித்த 10 பெண்களை தனது உயிரைப் பணயம் வைத்து மீட்டார்.

    மீதமுள்ள 3 பெண்களை தண்ணீர் இழுத்துச் சென்றது. மற்றும் மூன்று பெண்களையும் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே என ரஜினி வேதனை அடைந்தார். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சரசாள் (வயது 25) பெரிய மணி (55) என்ற இரண்டு பெண்கள் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.

    சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் சத்தியமங்கலம் போலீசாரும் விரைந்து வந்தனர். பிணமாக மீட்கப்பட்ட இரண்டு பெண்களின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பழனிச்சாமி என்பவரின் மனைவி வசந்தா (45) கதி என்ன என்று தெரியாமல் இருந்தது. அவரும் தண்ணீரில் மூழ்கி பலியாகி இருக்க கூடும் என்று கருதப்பட்டது. இன்று காலை 8 மணியிலிருந்து வசந்தா உடலை தேடும் பணி இரண்டாவது நாளாக தொடங்கியது. இந்த பணியில் போலீசார் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஈடுபட்டனர்.

    செம்படாம்பாளையம் பவானி ஆற்று படித்துறையில் வசந்தா உடல் இன்று காலை 9 மணிக்க கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டது.

    பவானி ஆற்றில் சிக்கி தத்தளித்த 13 பெண்களில் 10 பெண்களை தனி ஒரு மனிதராக அந்த பகுதியை சேர்ந்த ரஜினி என்ற விவசாயி காப்பாற்றி உள்ளார்.

    சம்பவத்தன்று ரஜினி ஆற்றின் கரையில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஆற்றின் மத்தியில் அலறும் சத்தமும் கைகள் மட்டும் வெளியே தெரிந்தது.

    இதை கண்ட ரஜினி ஆற்றில் யாரோ சிக்கி இருப்பதை உறுதி செய்து அடுத்த கணம் ஆற்றில் குதித்தார். நீரின் மத்தி பகுதிக்கு சென்ற அவர் ஒவ்வொரு பெண்ணாக இழுத்து ஆழமான பகுதியில் இருந்து மீட்டார்.

    ஆற்றின் கரையில் ரஜினியின் உறவினர் பெண் (தங்கைமுறை) லதா நின்று இருந்தார். அவரும் உதவி செய்தார். ஒவ்வொரு பெண்ணையும் ஆழமான பகுதியில் இருந்து ரஜினி காப்பாற்ற கரையில் இருந்த லதா கரையில் இருந்த சேலைகளை எல்லாம் கயிறு போல் சேர்த்து கட்டி ஆற்றில் வீசினார். அதை பிடித்து கொண்டு பெண்கள் கரை ஏறினார்கள்.

    கரையேறிய பெண்கள் மற்ற 3 பேரையும் காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே என வேதனை அடைந்தனர். தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தங்களை மீட்ட ரஜினியை சூழ்ந்து கொண்டு 10 பெண்கள் அழுதபடி தங்களை காப்பாற்றியதற்காக நன்றி கூறினர்.

    பெண்களை காப்பாற்றியது குறித்து ரஜினி கூறும்போது, ‘‘நான் ஆற்றின் கரையில் நின்று இருந்தேன். அப்போது ஆற்றின் மத்தி பகுதியில் இருந்து பெண்கள் அலறும் சத்தம் கேட்டது. பார்த்த போது ஆற்றில் கைகள் மட்டும் தண்ணீருக்கு வெளியே தெரிந்தது.

    அவர்களை காப்பாற்ற ஆற்றில் குதித்தேன். 10 பெண்களை காப்பாற்ற முடிந்தது. மீதி 3 பேர்களை காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே என்று நினைக்கும் போது வேதனையாக உள்ளது என்று கூறினார்.

    தனி ஒரு மனிதனாக ஆற்றில் குதித்து 10 பெண்களை காப்பாற்றிய விவசாயி ரஜினிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.  #BhavaniRiver

    Next Story
    ×