search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ராமேசுவரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்: ரூ.5 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு

    ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் 4-வது நாளாக இன்றும் தொடருவதால் ரூ.5 கோடி அளவிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. #RameswaramFishermen
    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிப்பதை தடுக்க பல்வேறு அதிரடி சட்டங்களை இலங்கை அரசு இயற்றி வருகிறது. அதன் அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 3 விசைப்படகுகளை நாட்டுடைமையாக்கியது.

    இதை கண்டித்தும், நாட்டுடைமையாக்கப்பட்ட 3 படகுகள் மற்றும் ஏற்கனவே அங்கு பராமரிப்பின்றி உள்ள 168 விசைப்படகுகளையும் விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று 4-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. வேலைநிறுத்தத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மீன்பிடி உபதொழில்களை சார்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

    மீனவர்களின் போராட்டத்தால் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. மீன்வரத்து இல்லாததால் ரூ.5 கோடி அளவிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் நாளை (7-ந் தேதி) பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இதில் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்கின்றனர். #RameswaramFishermen
    Next Story
    ×