search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிகள் தரத்தை உயர்த்த அதிக நிதி ஒதுக்க வேண்டும் - அன்புமணி கோரிக்கை
    X

    பள்ளிகள் தரத்தை உயர்த்த அதிக நிதி ஒதுக்க வேண்டும் - அன்புமணி கோரிக்கை

    பள்ளிகள் தரத்தை உயர்த்த அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #AnbumaniRamadoss

    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆட்சியாளர்கள் திணறி வரும் நிலையில், இப்பிரச்சினைக்கு அற்புதமானத் தீர்வை கண்டுபிடித்திருக்கிறது டெல்லி மாநில அரசு. பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளையும், சிறப்புப் பயிற்சி மூலம் ஆசிரியர்களின் திறனையும் மேம்படுத்தியதால் அங்குள்ள பள்ளிகளின் சேர்க்கை அதிகரித்துள்ளது.

    டெல்லி மாநில அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளும், கற்பித்தல் முறையும் இன்றைய காலத்திற்கு ஏற்ற வகையில் இல்லாததால், அங்கு பயின்று வந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு மாறத் தொடங்கினர். இத்தகைய சூழலில் 2014ஆம் ஆண்டு டெல்லியில் பொறுப்பேற்ற அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு, அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அதிரடியான திட்டங்களைச் செயல்படுத்தியதால் அரசு பள்ளிகளில் கல்விச் சூழல் தலைகீழாக மாறியிருக்கிறது.

    கற்பித்தலை எளிமையானதாகவும், சிந்தனையைத் தூண்டக்கூடியதாகவும் மாற்ற நினைத்த டெல்லி அரசு, முதற்கட்டமாக அரசு பள்ளிகளில் பணியாற்றும் 200 ஆசிரியர்களை பின்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அனுப்பி பயிற்சி பெற வைத்தது. அதன்பின்னர் படிப்படியாக 1000 அரசு பள்ளிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் இந்த நாடுகளுக்கு அரசு செலவில் சென்று பயிற்சி பெற்று வந்துள்ளனர். இவர்களைக் கொண்டு மற்ற ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    மொத்தமுள்ள 45,000 ஆசிரியர்களுக்கும் விரைவில் பயிற்சி அளிக்க டெல்லி அரசு திட்டமிட்டிருக்கிறது. உலகிலேயே தரமான கல்வி வழங்குவதில் முதலிடத்தில் இருப்பது பின்லாந்து தான். அங்கு ஆசிரியர்கள் பெற்ற பயிற்சிகளின் பயனாக டெல்லி பள்ளிகளில் கற்றல் என்பது சுமையற்ற அனுபவமாக மாறியுள்ளது.

    அடுத்ததாக, அனைத்து அரசு பள்ளிகளிலும் 8-ம் வகுப்பு வரை தினமும் ஒரு பாடவேளை, அதாவது 45 நிமிடங்கள் மகிழ்ச்சிப் பாடவேளையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பிடித்த வி‌ஷயம் தொடர்பான வினா - விடை, நீதி போதனை ஆகியவை மேற் கொள்ளப்படுகின்றன. இது கற்றலை சுகமான அனுபவமாக மாற்றியிருக்கிறது.

    தமிழகத்தில் அரசு பள்ளிகளின் நிலையை நினைத்துப் பார்க்கவே வேதனையாக உள்ளது. தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய கற்றல் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட வில்லை. புதியப் பாடத்திட்டம் குறித்தும் கூட இதுவரை முழுமையான பயிற்சி வழங்கப்படவில்லை. பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லை. எந்த முன்னேற்பாடும் இல்லாமல் ஆங்கிலவழிக் கல்வியை தொடங்குவதாலும், அங்கன்வாடிகளை மழலையர் வகுப்புகளாக மாற்றுவதாலும் எந்தவித பயனும் ஏற்படாது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். தில்லியில் மூடும் நிலையில் இருந்த பள்ளிகளுக்கு புத்துயிரூட்டப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இதிலிருந்தே அரசு பள்ளிகள் தொடர்பான தில்லி அரசின் அணுகுமுறையையும், தமிழக அரசின் அணுகுமுறையையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

    டெல்லியில் மொத்த பட்ஜெட் மதிப்பில் 26 சதவீதம் பள்ளிக் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அதே அளவு ஒதுக்கீடு செய்வதாக வைத்துக் கொண்டால், மொத்த பட்ஜெட் மதிப்பான ரூ.1,93,742 கோடியில் ரூ.50,372.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

    தமிழக அரசோ கிட்டத்தட்ட அதில் பாதியைத் தான் ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகள் வளராமல் சீரழிவதற்கு இது தான் முக்கியக் காரணமாகும்.

    ஒரு மாநிலத்தில் அரசு பள்ளிகள் வளராமல் அம்மாநிலத்தில் உண்மையான கல்வி வளர்ச்சி ஏற்படாது. எனவே, பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை முதல் கட்டமாக மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 4சதவீதம் அல்லது மொத்த பட்ஜெட் மதிப்பில் 25 சதவீதம் என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும். ஆசிரியர்களுக்கு பன்னாட்டு அளவிலான பயிற்சி, பள்ளிகளில் உலகத்தர கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாடத்திட்டத்தை உருவாக்கி அரசு பள்ளிகளுக்கு புத்துயிரூட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×