search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கு - கடலூர் கோர்ட்டில் நாஞ்சில் சம்பத் ஆஜர்
    X

    முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கு - கடலூர் கோர்ட்டில் நாஞ்சில் சம்பத் ஆஜர்

    பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாஞ்சில் சம்பத் கடலூர் கோர்ட்டில் இன்று ஆஜரானார்.
    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப் புலியூரில் கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி தினகரன் அணி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அவதூறாக பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில் அவர் கடலூர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தார். அவரை ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை நாஞ்சில் சம்பத் கடலூர் வந்தார். கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் ஆஜரானார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதம் 7-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    இந்த வழக்கில் நாஞ்சில் சம்பத் சார்பாக வக்கீல் திருமார்பன் ஆஜரானார். அதன் பின்னர் நாஞ்சில் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூர் திருப்பாதிரிப் புலியூர் கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி தினகரன் அணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நான் தினகரன் தலைமையை ஏற்று இருந்த காலத்தில் பேசினேன்.

    இந்த பொதுக்கூட்டம் நடந்து முடிந்து 8 மாதம் முடிந்த நிலையில் முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சரை அவதூறாக பேசியதாக கூறி கடலூர் நீதிமன்றத்தில் இருந்து எனக்கு சம்மன் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் இன்று கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானேன். நான் பொது வாழ்வில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியே வந்துவிட்டேன். தற்போது இலக்கிய மேடை, பொது நிகழ்ச்சி மற்றும் மாணவர்களை சந்தித்து பேசி வருகிறேன்.

    மேலும் பொது வாழ்வில் இருந்தும், அரசியல் வாழ்க்கையில் இருந்தும் விலகுகிறேன் என்று அறிவித்த பிறகு இந்த வழக்கு கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதின் பேரில் அரசு வக்கீல் மூலம் அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

    பொதுவாழ்வில் இருப்பவர்கள் தன் மீது வரும் விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாவிட்டால் பொது வாழ்வில் இருந்து விலகிவிட வேண்டும். இதுபோல் அவதூறு வழக்கு போடக்கூடாது.

    மேலும் என் மீது 49 அவதூறு வழக்குகள் உள்ளன. ஆனால் பொதுவாக அவதூறு வழக்கில் இதுவரை தண்டனை யாரும் பெற்றதாக எனக்கு தெரியவில்லை. 6 மாதம் கழித்து இந்த வழக்கு போட்டிருப்பது ஆட்சியாளர்களின் கேலிக் கூத்தாக தெரிகிறது.

    பொது வாழ்வில் இருந்து நான் விலகிய பிறகு என்னை தண்டிக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் துடிக்கிறார்கள். இதன் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்- அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

    இதுமட்டுமன்றி இந்த வழக்கில் முதல்-அமைச்சரோ, துணை முதல்- அமைச்சர் ஆஜராக கூடாது என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நடக்க வேண்டுமானால் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

    இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முதல்- அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சரை கூண்டில் ஏற்றுவது தவிர வேறு வழியில்லை. விரைவில் நீதிமன்ற கூண்டில் அவர்கள் ஏறும் காலம் வரும். முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் வருங்காலங்களில் நிம்மதியாக இருக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×