search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிய காட்சி.
    X
    குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிய காட்சி.

    ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் - குற்றாலம் அருவிகளில் 3-ம் நாளாக குளிக்க தடை

    நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், மூன்றாம் நாளாக இன்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    தென்காசி:

    தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. குற்றாலம் மலைப் பகுதியில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது. ஆண்டுதோறும் தென்மேற்கு பருவ மழையின்போது ஜூன் மாதத்தில் குற்றால சீசன் களை கட்டும்.

    தொடர்ந்து ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். சில ஆண்டுகளில் செப்டம்பர் வரையிலும் சீசன் தொடர்ந்து இருக்கும். சீசனை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த நிலையில் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே குற்றாலத்தில் சீசன் ரம்மியமாக உள்ளது.

    அவ்வப்போது சாரல் தூறியபடி இருப்பதால் சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்துள்ளார்கள். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மலைப்பகுதியில் கனமழை பெய்வதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    இன்று காலையிலும் மலைப் பகுதியில் மழை பெய்ததால் மெயின் அருவி யில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக சுற்றுலாபயணிகள் 3-வது நாளாக குளிக்க அனுமதிக்கப்படவில்லை. ஐந்தருவியிலும் நீரின் வேகம் அதிகமாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கவில்லை.

    பழைய குற்றாலம் அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. புலியருவியில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்படுவதால், அங்கு கூட்டம் அலைமோதுகிறது. குற்றாலத்தில் சாரல் மழையுடன் காற்று வேகமாக வீசுகிறது. இதமான சூழல் நிலவியபோதிலும் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இதேபோல மணிமுத்தாறு அருவியிலும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் தண்ணீர் அதிகளவில் கொட்டுகிறது.
    Next Story
    ×