search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடிய விடிய கன மழை - தேனி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
    X

    விடிய விடிய கன மழை - தேனி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

    தேனி மாவட்டத்தில் கன மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    கம்பம்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே விட்டு விட்டு மழை பெய்து வந்தது. நேற்று காலை முதல் இடைவிடாது மழை பெய்து வந்தது.

    பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் முறிந்தும் மின் வயர்கள் அறுந்தும் விழுந்தன. இரவு முழுவதும் தேனி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத் தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    மஞ்சளாறு, சோத்துப்பாறை ஆகிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதுடன் சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இரவு முழுவதும் கன மழை பெய்ததால் மாவட்டத்தின் பல பகுதிகள் இருளில் மூழ்கியது. இன்று காலையிலும் சாரல் மழை பெய்தபடி இருந்தது.

    மரங்கள் முறிந்து விழுந்த இடங்களிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பகுதிகளிலும் நெடுஞ்சாலை மற்றும் மின் வாரிய அதிகாரிகள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கன மழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவிக்கையில், தேனி மாவட்டம் முழுவதும் கன மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று 2-வது நாளாக கன மழை நீடித்து வருவதால் தேனி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

    இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள கொடைக்கானலிலும் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கொடைக்கானல் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×