search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக பழனி ஐம்பொன் சிலையை எடுத்து சென்ற அதிகாரிகள்
    X

    கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக பழனி ஐம்பொன் சிலையை எடுத்து சென்ற அதிகாரிகள்

    சர்ச்சைக்குள்ளான பழனி ஐம்பொன் சிலையை கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அதிகாரிகள் இன்று எடுத்து சென்றனர். #Idolsmuggling

    பழனி:

    அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் உள்ள மூலவர் சிலை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகரால் வடிவமைக்கப்பட்ட நவபாஷாணத்தால் ஆனதாகும்.

    இந்த சிலை சேதம் அடைந்ததாக கூறி புதிய மூலவர் சிலை அமைக்க கடந்த 2003-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஐம்பொன்னால் ஆன 200 கிலோ எடையில் சிலை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது.

    ஸ்தபதி முத்தையா தலைமயில் சிலை வடிவமைக்கப்பட்டு 2004-ம் ஆண்டு மூலவர் சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கருவறையில் 2 சிலைகள் இருப்பதை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஆனால் சில மாதங்களிலேயே ஐம்பொன்சிலை நிறம் மாறத் தொடங்கியது. இதனால் சிலை அமைத்ததில் மோசடி நடந்திருக்கலாம் என பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.

    அதன்பிறகு மூலவர் சன்னதியில் வைக்கப்பட்ட ஐம்பொன்சிலை அகற்றப்பட்டு கோவில் தனி அறையில் வைக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக பல்வேறு கோவில்களில் நடந்த சிலை மோசடி குறித்து விசாரணை நடத்தி வந்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் பழனிகோவிலிலும் விசாரணை மேற்கொண்டார்.

    இந்த விசாரணையில் புதிய ஐம்பொன் சிலை செய்ததில் முறைகேடு நடந்தது தெரிய வரவே ஸ்தபதி முத்தையா, முன்னாள் இணை ஆணையர் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த நகை மதிப்பீட்டாளர் உள்பட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சிலை வடிவமைக்கப்பட்ட காலத்தில் பணியில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபாலிடம் விசாரணை நடத்த முயன்றபோது அவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க மதுரை ஐகோர்ட்டு கிளையில் தடை ஆணை பெற்றார்.

    ஐகோர்ட்டு உத்தரவின்படி கடந்த வாரம் கும்பகோணம் நீதிமன்றத்தில் தனபால் ஆஜராகி நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தும் கும்பகோணம் நீதிமன்றத்தில் நடந்து வருவதால் சர்ச்சைக்கு உள்ளான ஐம்பொன் சிலையை கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி பழனி கோவிலுக்கு வந்த ஏ.டி.எஸ்.பி. ராஜாராம் தலைமையிலான போலீசார், பழனி தாசில்தார் செந்தில்குமார் முன்னிலையில் ஐம்பொன்சிலையை எடுத்துச் சென்றனர்.

    இதனால் பழனி கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது. #Idolsmuggling

    Next Story
    ×