search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மறைமலைநகர் அருகே விபத்தில் பெண் பலி- பொதுமக்கள் மறியல்
    X

    மறைமலைநகர் அருகே விபத்தில் பெண் பலி- பொதுமக்கள் மறியல்

    மறைமலைநகர் அருகே அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    செங்கல்பட்டு:

    மறைமலைநகரை அடுத்த சட்டமங்கலத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மனைவி லாவண்யா (வயது 35). இவர்களது 3½ வயது குழந்தை நிஷாந்த்.

    நேற்று இரவு புஷ்பராஜ், மோட்டார் சைக்கிளில் மனைவி மற்றும் குழந்தையுடன் மறைமலைநகரை அடுத்த மகேந்திரா சிட்டி அருகில் வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய லாவண்யா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். தூக்கி வீசப்பட்ட புஷ்பராஜும், அவரது மகன் நிஷாந்தும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். விபத்து நடந்ததும் பஸ் டிரைவரும், கண்டக்டரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் லாவண்யாவின் உறவினர்கள் மற்றும் திருத்தேரி, மகேந்திரா சிட்டி பகுதியில் வசிக்கும் பொது மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    அடிக்கடி இப்பகுதியில் விபத்து ஏற்படுவதாக கூறி அவர்கள் சென்னை-திருச்சி சாலையில் இரு பக்கங்களிலும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இதுபற்றி அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமாலினி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகுமாறு கூறினர்.

    ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் விபத்து ஏற்படுத்திய பஸ்சின் கண்ணாடியையும் நொறுக்கினர்.


    அப்போது கூட்டத்தில் இருந்து பறந்து வந்த கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானியின் தலையில் விழுந்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தமும் கொட்டியது.

    நேரம் செல்லச்செல்ல வன்முறை ஏற்பட்டு பதட்டமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

    மறியலில் ஈடுபட்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதன் பின்னரே நிலைமை கட்டுக்குள் வந்தது.

    இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் இரவு 11 மணி வரை போக்குவரத்து நெரிசல் இருந்தது. அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

    பொது மக்களின் கல்வீச்சில் 10-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதே போல் போலீசாரின் தடியடியில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இது தொடர்பாக மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேரை பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    பலியான லாவண்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    Next Story
    ×