search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கங்கை கொண்ட சோழபுரம் - ஐராவதீஸ்வரர் கோவில்களிலும் சிலைகள் மாயம்?
    X

    கங்கை கொண்ட சோழபுரம் - ஐராவதீஸ்வரர் கோவில்களிலும் சிலைகள் மாயம்?

    முதலாம் ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலும், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலும் சிலைகள் எதுவும் மாயமாகி உள்ளதா? என்று விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
    தஞ்சாவூர்:

    மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் இருந்த ராஜராஜ சோழன் சிலை, அவரது மனைவி லோகமா தேவியார் சிலைகள் கொள்ளை போய் உள்ளதாக திருச்சியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு ஐ.ஜி. அலுவலகத்தில் முன்னாள் எம்.பி. சுவாமிநாதன் புகார் அளித்தார்.

    இதைதொடர்ந்து ஐ.ஜி.பொன். மாணிக்கவேல் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி.வெங்கட்ராமன் தலைமையிலான போலீசார் தஞ்சை பெரிய கோவிலுககு ரகசியமாக வந்து ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள ஆவணங்களை பார்வையிட்டு தற்போது பொறுப்பில் உள்ளவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கோவிலில் இருந்த ராஜராஜ சோழன் சிலை, அவரது மனைவி லோகமாதேவியார் சிலைகள் உள்பட ஏராளமான சிலைகள் திருடப்பட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தொடர் விசாரணை நடத்தியதில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த சிலைகள் கொள்ளை போய் விட்டது தெரிய வந்தது.

    கி.பி.95-ம் ஆண்டில் ராஜராஜ சோழனால் நியமிக்கப்பட்ட காரியக்காரரான கொடும்பாளூர் தென்னவன் மூவேந்த வேளாண் மறவர் தஞ்சை பெரிய கோவிலுக்கு மொத்தம் 13 பஞ்ச லோக சிலைகள் செய்து கொடுத்துள்ளார். இதில் ராஜராஜசோழன் சிலை, லோகமாதேவியார் சிலை, தங்கத்தால் ஆன சேத்திர பாலர் சிலை, அர்த்தநாரீஸ்வரர் ஐம்பொன் சிலை, தாய் வானவன் மகாதேவி, தந்தை பொன் மாளிகை துஞ்சியதேவர் ஆகிய சிலைகளும் மாயமாகி இருந்தது. இந்த சிலைகளின் மதிப்பு சர்வதேச சந்தை மதிப்பில் ரூ.100 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது.

    இதில் ராஜராஜ சோழன் சிலை, லோகமாதேவியார் சிலைகள் மட்டும் குஜராத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதைதொடர்ந்து இந்த சிலைகளை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதற்கிடையே சிலைகள் கொள்ளை போன பெரிய கோவிலில் இதுவரை இருந்த அறநிலையத்துறை அதிகாரிகள், தக்கார் போன்ற பொறுப்புகளில் இருந்தவர்கள், மற்றும் அறங்காவலர்கள் பெயர்கள் விவரங்களை சேகரித்து பட்டியல் தயாரிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். மேலும் அரசியல் கட்சியினரும் இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? என்றும் ரகசியமாக விசாரித்து வருகிறார்கள்.

    இந்த பட்டியலை இன்னும் ஒரு வாரத்திற்குள் வழங்கும்படி அறநிலையத் துறை அதிகாரிகளிடம் போலீசார் கேட்டு கொண்டுள்ளனர். ஒருவேளை அவர்கள் இழுத்தடித்தால் போலீசாரே களம் இறங்கவும் முடிவு செய்துள்ளனர்.

    இந்த சிலைகள் கொள்ளை போன வழக்கு விசாரணையில் போலீசாருக்கு மிகவும் கைகொடுத்தது ராஜராஜ சோழனின் கல்வெட்டு குறிப்புகள் தான்.

    அதாவது ராஜராஜ சோழன் தனது வாழ்நாள் முடிவு நெருங்கி விட்டதை உணர்ந்து பெரிய கோவிலுக்கு வழங்கப்பட்ட சிலைகள், மற்றும் நிலங்கள் குறித்து கோவிலில் கல்வெட்டுகளாக பொறிக்க உத்தரவிட்டான். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்புள்ள அந்த கல்வெட்டு குறிப்புகளை வைத்து தான் சிலைகள் கொள்ளைபோனது உறுதிபடுத்தப்பட்டது.

    கடந்த 1959-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் அறநிலையத்துறைக்கு மாற்றப்பட்டது. இதனால் கோவில்களில் உள்ள ஆவணங்களில் கோவில்களில் உள்ள சிலைகள் விவரம், குத்தகை நிலங்கள், கோவிலுக்குரிய சொத்துகள் விவரங்கள் இருக்கும்.

    ஆனால் இவை அனைத்தும் கணக்கு பதிவேடுகளில் எழுதிவரப்பட்டது. நாளடைவில் கோவிலில் உள்ள சிலைகள், சொத்துகள் குறித்த கணக்கெடுப்புகளை அறநிலையத்துறை அதிகாரிகள் சரிவர எடுக்காமல் இருந்ததால் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்தது.

    இந்த நிலையில் தஞ்சை பெரிய கோவிலை போல மேலும் சில கோவில்களில் இதேபோல் சிலைகள் கொள்ளை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகிறார்கள்.

    குறிப்பாக ராஜராஜ சோழனின் வாரிசான முதலாம் ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலும், கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலும் பிரசித்தி பெற்றதாகும். இதனால் இக்கோவில்களிலும் சிலைகள் எதுவும் மாயமாகி உள்ளதா? என்று விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட புகழ்பெற்ற கோவில்களில் எல்லாம் போலீசார் ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளனர்.

    தஞ்சை பெரிய கோவிலில் இன்னும் சில நாட்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்த உள்ளனர். அதன்பிறகு தோண்ட தோண்ட பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. #tamilnews

    Next Story
    ×