search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரிசி ஆலை கட்டிடம் இடிந்த இடத்தில் குவிந்த பொதுமக்கள்
    X
    அரிசி ஆலை கட்டிடம் இடிந்த இடத்தில் குவிந்த பொதுமக்கள்

    5 பெண்கள் பலி: அரிசி ஆலை கட்டிடத்தின் உறுதி தன்மை ஆய்வு

    செங்கம் அருகே இடிதாக்கிய அரிசி ஆலை கட்டிடத்தின் உறுதி தன்மை, பேரூராட்சியில் முறையாக அனுமதி பெற்று கட்டிடம் கட்டப்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தளவநாயக்கன்பேட்டையில் நவ்ஷாத் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை உள்ளது. இந்த ஆலையின் கட்டிடம் புதுப்பிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்த பணியில் செங்கத்தை அடுத்த சொர்பணந்தல் கிராமத்தை சேர்ந்த ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் மாலை 5 மணியளவில் செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 7 பெண்கள் அரிசி ஆலையின் கட்டிடப்பணி நடந்த ஒரு அறையில் மழைக்காக ஒதுங்கினார்கள்.

    தொடர்ந்து பலத்தமழை பெய்ததால் பெண்கள் அனைவரும் அறையிலேயே நின்று கொண்டிருந்தனர். அந்த அறையின் அருகே தகரத்தினாலான புகைக்கூண்டு இருந்தது.

    அப்போது அங்கு கட்டிட பணி தாங்குவதற்கு வைக்கப்பட்டிருந்த கம்பிகள் மற்றும் ஹைட்ராலிக் எந்திரத்திலும் மின்சாரம் பாய்ந்தது. கட்டிட பணி நடந்து கொண்டிருந்த அறை பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதனால் அந்த அறையில் மழைக்கு ஒதுங்கி நின்று கொண்டிருந்த 7 பெண்களும் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி அலறினர். இதைக்கண்ட சக தொழிலாளர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    செங்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் செங்கம் அடுத்த சொர்பனந்தலை சேர்ந்த ஆண்டாள் (வயது 55), ஆரவள்ளி (40), குமுதா (31), செல்வி (40), ரேணு (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    மேலும் குப்பம்மாள் (30, தேக்கவாடி இருதயமேரி ஆகிய 2 பேரும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 2 பேரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது.

    கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    தாசில்தார் உதயகுமார், வருவாய் ஆய்வாளர் துரைராஜ் ஆகியோர் இன்று காலை கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.

    பேரூராட்சியில் முறையாக அனுமதி பெற்று கட்டிடம் கட்டப்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×