search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வினுக்கு பதிலடி கொடுப்பாரா பட்லர்? பஞ்சாப் - ராஜஸ்தான் இன்று மோதல்
    X

    அஸ்வினுக்கு பதிலடி கொடுப்பாரா பட்லர்? பஞ்சாப் - ராஜஸ்தான் இன்று மோதல்

    சொந்த மண்ணில் பஞ்சாப்பிடம் தோற்றதற்கு இன்று பதிலடி கொடுத்து 3-வது வெற்றியை ராஜஸ்தான் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #KXIPvsRR
    மொகாலி:

    ஐ.பி.எல். போட்டியின் 32-வது ‘லீக்’ ஆட்டம் மொகாலியில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    இதில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பஞ்சாப் அணி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி ராஜஸ்தான் (14 ரன்), மும்பை (8 விக்கெட்), டெல்லி (14 ரன்), ஐதராபாத் (6 விக்கெட்) ஆகியவற்றை வீழ்த்தி இருந்தது. கொல்கத்தா (28 ரன்), சென்னை (22 ரன்), மும்பை (3 விக்கெட்), பெங்களூர் (8 விக்கெட்) ஆகிய அணிகளிடம் தோற்று இருந்தது.

    ராஜஸ்தானை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் பஞ்சாப் நம்பிக்கையுடன் ஆடும். அந்த அணியை மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (335 ரன்), கிறிஸ் கெய்ல் (322 ரன்), அகர்வால் (199 ரன்) ஆகியோர் அதிரடியாக ஆடி வருகிறார்கள்.

    பந்துவீச்சில் முகமது ‌ஷமி (10 விக்கெட்), கேப்டன் அஸ்வின் (9 விக்கெட்), சாம் குர்ராண் (7 விக்கெட்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி மும்பை (4 விக்கெட்), பெங்களூர் (7 விக்கெட்) ஆகியவற்றை மட்டுமே வீழ்த்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்சிடம் 2 முறையும் (8 ரன், 4 விக்கெட்) தோற்றது. இதேபோல ஐதராபாத் (5 விக்கெட்), கொல்கத்தா (8 விக்கெட்) அணிகளிடமும் தோற்று இருந்தது.

    சொந்த மண்ணில் பஞ்சாப்பிடம் 14 ரன்னில் தோற்றதற்கு இன்று பதிலடி கொடுத்து 3-வது வெற்றியை பெறும் வேட்கையில் ராஜஸ்தான் உள்ளது.

    ராஜஸ்தான் அணியில் பட்லர் (268 ரன்), ஸ்டீவ் சுமித் (186 ரன்), கேப்டன் ரகானே (175 ரன்) போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், ஷிரேயாஸ் கோபால் (8 விக்கெட்), ஆர்ச்சர் (7 விக்கெட்), பென் ஸ்டோக்ஸ் (6 விக்கெட்) போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

    இரு அணிகளும் ஜெய்ப்பூரில் மோதிய ஆட்டத்தில் ‘மன்கட்’ அவுட் ஆனது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பட்லரை அஸ்வின் செய்த இந்த ரன் அவுட் விவகாரம் இன்றைய ஆட்டத்தில் எதிரொலிக்கும். இதற்கு தங்களது அபாரமான ஆட்டம் மூலம் ராஜஸ்தான் பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். #KXIPvsRR
    Next Story
    ×