search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான பரபரப்பான டெஸ்டில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி
    X

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான பரபரப்பான டெஸ்டில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டர்பனில் நடந்த பரபரப்பான டெஸ்டில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. #SAvSL
    டர்பன்:

    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்கா 235 ரன்களும், இலங்கை 191 ரன்களும் எடுத்தன. 44 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 259 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 304 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. ஒஷாடே பெர்னாண்டோ 28 ரன்களுடனும், குசல் பெரேரா 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணியில் ஒஷாடே பெர்னாண்டோ (37 ரன்), அடுத்து வந்த விக்கெட் கீப்பர் டிக்வெல்லா (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் கபளகரம் செய்தார். இதன் பின்னர் 6-வது விக்கெட்டுக்கு குசல் பெரேராவும், தனஞ்ஜெயா டி சில்வாவும் இணைந்து அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டதுடன் அணியின் ஸ்கோரை 200 ரன்களை கடக்க வைத்தனர். 6-வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் திரட்டிய இந்த ஜோடிக்கு சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் ‘செக்’ வைத்தார். ஒரே ஓவரில் தனஞ்ஜெயா டி சில்வா (48 ரன்), அடுத்து வந்த லக்மல் (0) ஆகியோரை காலி செய்தார். எம்புல்டெனியா (4 ரன்), ரஜிதா (1) ஆகியோரும் தாக்குப்பிடிக்கவில்லை. அப்போது இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 226 ரன்களுடன் தத்தளித்துக் கொண்டிருந்தது. தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெறுவது உறுதி என்றே நினைக்கத்தோன்றியது.

    இந்த சூழலில் குசல் பெரேரா கடைசி விக்கெட்டுக்கு நுழைந்த விஷ்வா பெர்னாண்டோவுடன் ஜோடி சேர்ந்து அணியை கரைசேர்க்கும் போராட்டத்தில் இறங்கினார். ஸ்டெயின், ரபடாவின் ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்டு திகைப்பூட்டிய குசல் பெரேரா, பெரும்பாலும் எதிரணியின் பந்து வீச்சை தானே சந்திக்கும் முனைப்புடன் செயல்பட்டார். இருப்பினும் விஷ்வா பெர்னாண்டோவும் எதிர்கொண்ட பந்துகளை திறம்பட சமாளித்தார். இலக்கை நெருங்கிய போது தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் பதற்றத்திற்கு உள்ளானார். பந்து வீச்சு வியூகங்களை மாற்றி பார்த்தும் பலன் கிட்டவில்லை.

    உச்சக்கட்ட பரபரப்பு, நெருக்கடிக்கு இடையே நம்பிக்கையை தளரவிடாமல் நேர்த்தியாக ஆடிய குசல் பெரேரா, தென்ஆப்பிரிக்காவின் புயல்வேக தாக்குதலை முறியடித்து பிரமாதப்படுத்தினார். கடைசியில் பவுண்டரி அடித்து இலக்கை எட்ட வைத்தார். இலங்கை அணி 85.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது.

    தனது 2-வது சதத்தை நிறைவு செய்த குசல் பெரேரா 153 ரன்களுடனும் (200 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்), விஷ்வா பெர்னாண்டோ 6 ரன்னுடனும் (27 பந்து) களத்தில் இருந்தனர். இவர்கள் கடைசி விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தனர். வெற்றிகரமாக இலக்கை துரத்திப்பிடித்த (சேசிங்) டெஸ்ட் போட்டிகளில் 10-வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இது தான். 1994-ம் ஆண்டு கராச்சியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தானின் இன்ஜமாம் உல்-ஹக், முஷ்டாக் அகமது ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதே முந்தைய அதிகபட்சமாக இருந்தது. அந்த 25 ஆண்டு கால சாதனையை இலங்கை ஜோடி தகர்த்துள்ளது. தென்ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கைக்கு கிடைத்த 2-வது வெற்றியாக இது அமைந்தது. இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு இதே மைதானத்தில் வெற்றி பெற்றிருந்தது.

    இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 21-ந்தேதி போர்ட் எலிசபெத்தில் தொடங்குகிறது.
    Next Story
    ×