search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக செயல்படும் - பயிற்சியாளர் பாஸ்கரன் நம்பிக்கை
    X

    புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக செயல்படும் - பயிற்சியாளர் பாஸ்கரன் நம்பிக்கை

    ‘புரோ கபடி லீக் போட்டி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக செயல்படும்’ என்று அந்த அணியின் பயிற்சியாளர் கே.பாஸ்கரன் நம்பிக்கை தெரிவித்தார். #TamilThalaivas #Bhaskaran
    சென்னை:

    6-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி தொடங்குகிறது. பல்வேறு இடங்களில் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 5-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பால்டன், மும்பை (ஏ பிரிவு), பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், உ.பி.யோத்தா ஆகிய 12 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன.



    லீக் ஆட்டம் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். சென்னையில் அக்டோபர் 5-ந் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த சீசனுக்கான புரோ கபடி லீக் போட்டிக்கான தமிழ் தலைவாஸ் அணியின் சீருடை அறிமுக நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாகூர், பயிற்சியாளர் கே.பாஸ்கரன், அணியின் தூதுவர் நடிகர் விஜய் சேதுபதி, தலைமை செயல் அதிகாரி வீரென் டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டு சீருடையை அறிமுகம் செய்து வைத்தனர். இதில் வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டு புதிய சீருடையுடன் போஸ் கொடுத்தனர்.

    தமிழ் தலைவாஸ் அணியில் அஜய் தாகூர் (கேப்டன்), அனில் குமார், அமித் ஹூடா, மன்ஜீத் ஷில்லார், ஜஸ்பிர்சிங், சுகேஷ் ஹெக்டே, சுர்ஜீத் சிங், சுனில், அருண், தர்ஷன், கோபு, அதுல், பிரதாப், ஜெயசீலன், அபிநந்தன் சண்டேல், ஆனந்த், விமல் ராஜ், ஜா மின் லீ, சான் சிக் பார்க் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    விழாவில் பங்கேற்ற தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் கே.பாஸ்கரன் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கூறுகையில், ‘ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய கபடி அணி தங்கப்பதக்கத்தை தவற விட்டது எதிர்பாராததாகும். ஈரானுக்கு எதிரான அரைஇறுதியில் நமது ஆட்டம் சரியாக அமையவில்லை. வீரர்களின் ஆட்டம் எடுபடாமல் போவது எப்போதாவது நடக்கத்தான் செய்யும். அதே நேரத்தில் 2010-ம் ஆண்டு முதலே ஈரான் அணி ஆசிய விளையாட்டு போட்டிக்காக தீவிரமாக தயாராகி சிறப்பாக செயல்பட்டதை மறுக்க முடியாது. ஆசிய விளையாட்டு போட்டியில் நடந்த தவறு மீண்டும் நடக்காது. வருங்காலங்களில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன். தமிழ் தலைவாஸ் அணியில் சீனியர் மற்றும் இளம் வீரர்கள் போதுமான அளவில் இடம் பெற்றுள்ளனர். தற்போதைய அணியில் 5 தமிழக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். கடந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி கடைசி நிமிடங்களில் தான் போட்டியில் சறுக்கியது. அஜய் தாகூர் ஆட்டம் இழந்தால், அதன் பிறகு அணியை வழிநடத்த அனுபவம் மிக்க வீரர்கள் இல்லாததால் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. ஆனால் இந்த முறை அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர். இதனால் இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி மிகச்சிறப்பாக செயல்படும்’ என்று தெரிவித்தார்.

    தமிழ் தலைவாஸ் அணியின் தூதுவரும், நடிகருமான விஜய் சேதுபதி பேசுகையில், ‘நமது பாரம்பரிய ஆட்டமான கபடி வேகம், விவேகம் நிறைந்ததாகும். மக்களின் மனம் கவர்ந்த இந்த போட்டிக்கு நாம் எல்லோரும் ஆதரவு அளிக்க வேண்டியது அவசியமானதாகும். தமிழ் தலைவாஸ் அணியின் தூதுவராக நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிரிக்கெட்டை தாண்டி கபடி புதிய உச்சத்தை எட்டும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.  #TamilThalaivas #Bhaskaran
    Next Story
    ×