search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழைய நோட்டுகளை மாற்றி தரவேண்டும்: சூதாட்ட தரகர் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு
    X

    பழைய நோட்டுகளை மாற்றி தரவேண்டும்: சூதாட்ட தரகர் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு

    ஐ.பி.எல். சூதாட்டத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.5.5 லட்சம் பழைய நோட்டுகளை மாற்றி தர சூதாட்ட தரகர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
    புதுடெல்லி:

    2013-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் ஸ்பாட்பிக்சிங் எனும் சூதாட்டம் நடந்ததை டெல்லி போலீசார் கண்டு பிடித்தனர்.

    ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜ்த் சண்டிலியா உள்ளிட்ட வீரர்கள் இதில் சிக்கினார்கள். பல்வேறு சூதாட்ட தரகர்களும் கைதானார்கள்.

    ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் சிக்கிய 36 பேரையும் விடுவித்து டெல்லி கோர்ட்டு 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது.

    சூதாட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவர் அபிஷேக்சுக்லா. சூதாட்டதரகரான இவரிடம் இருந்து விசாரணையின் போது டெல்லி போலீசார் 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.5½ லட்சம் பணத்தை கைப்பற்றி இருந்தனர்.

    வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால் அவரது பணத்தை டெல்லி போலீசார் திருப்பி கொடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதிதான் அந்த பணம் கொடுக்கப்பட்டது.இவை அனைத்தும் பழைய நோட்டுகள் ஆகும். அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 பழைய நோட்டுகள் ஆகும்.

    ரூ.5½ லட்சம் மதிப்பிலான இந்த பழைய நோட்டுகளை அபிஷேக் சுக்லா வங்கியில் டெபாசிட் செய்வதற்காக ரிசர்வ் வங்கியை அணுகினார். ஆனால் ரிசர்வ் வங்கி இந்த நோட்டுகளை ஏற்க மறுத்துவிட்டது.


    அரசு நிர்ணயித்த காலத்துக்கு பிறகு (நவம்பர் 8- டிசம்பர் 30, 2016) நோட்டுகளை மாற்றி புதிய நோட்டுகள் தர இயலாது. இதற்கு சட்டத்தில் அனுமதி இல்லை. வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு மட்டுமே அனுமதி இருப்பதாக தெரிவித்தது.

    இதை தொடர்ந்து அபிஷேக்சுக்லா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். ரூ.5½ லட்சம் பழைய நோட்டுகளை மாற்றி தர ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டது.

    அவரது வக்கீல் கூறும் போது அபிஷேக்சுக்லாவின் ரூ.5½ லட்சம் பழைய நோட்டுகளை ரிசர்வ் வங்கி மாற்றி கொடுக்காதது ஏன்? என்று தெரியவில்லை.

    இதில் டெல்லி போலீசார் மீது தான் தவறு இருக்கிறது. பிப்ரவரி மாதம் இந்த பணத்தை கொடுத்தனர். அவர்கள் தான் இதற்கு பொறுப்பானவர்கள் என்றார்.

    தலைமை நீதிபதி ஜே.எஸ். கேகர், நீதிபதிகள் சந்திரசூட், எஸ்.கே. கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. டெல்லி போலீசார் கைப்பற்றி இருந்த ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகளின் வரிசை நம்பரை தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டது.
    Next Story
    ×