search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எமிசாட் செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட்
    X

    எமிசாட் செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட்

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட எமிசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.#ISRO #PSLVC45
    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகளை தயாரித்து, அவற்றில் செயற்கைக்கோள்களை பொருத்தி விண்வெளிக்கு வெற்றிகரமாக ஏவி வருகிறது. அந்தவகையில் தற்போது இஸ்ரோ தயாரித்துள்ள பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் இன்று காலை 9.30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.



    இந்த ராக்கெட் முதன் முறையாக வெவ்வேறு புவிவட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த ராக்கெட்டில் மின்னணு நுண்ணறிவு செயற்கைக்கோளான ‘எமிசாட்’ உடன் 28 வணிக ரீதியிலான செயற்கைக்கோள்களும் ஏவப்பட்டன.

    இந்த ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 71-வது ராக்கெட், இந்த ஆண்டு ஏவப்படும் 2-வது ராக்கெட் மற்றும் பி.எஸ்.எல்.வி.- க்யூஎல் ரகத்தில் முதல் ராக்கெட் என்ற பெருமைகளை இந்த ராக்கெட் பெறுகிறது.

    பொதுவாக ஒரே ஒரு புவிவட்டப்பாதையில் தான் செயற்கைக்கோள்களை ராக்கெட்டுகள் நிலை நிறுத்துவது வழக்கம். ஆனால் இந்த ராக்கெட்டில் வெவ்வேறு வகையான 3 புவிவட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தியது.

    இந்திய ரேடார் நெட்வொர்க்கை கண்காணிப்பதற்காக 436 கிலோ எடை கொண்ட ‘எமிசாட்’ செயற்கைகோள் உருவாக்கப்பட்டுள்ளது. மின்காந்த நிறமாலை அளவீடு செய்வதற்காக பயன்படுகிறது. 

    இந்த செயற்கைக்கோள் முதலில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 753 கி.மீ உயரத்தில் புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.பின்னர்  லித்துவேனியா நாட்டுக்கு சொந்தமான 2 செயற்கைக்கோள்கள், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு சொந்தமான தலா 1 செயற்கைக்கோள்கள் மற்றும் அமெரிக்கா நாட்டை சேர்ந்த 24 செயற்கைக்கோள்கள் உட்பட 28 செயற்கைக்கோள்களும் சுமார் 505 கி.மீ உயரத்தில் அவற்றுக்கான புவிவட்டப்பதையில் நிலை நிறுத்தப்படுகின்றன.

    29 செயற்கைக்கோள்களும் சுற்றுப்பாதைக்குள் நுழைந்த உடன், ராக்கெட்டின் 4-வது நிலை வேறுபட்ட உயரத்திற்கு இயக்கப்படுகிறது.

    இந்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சிக்கும் இவை பயன்படுத்தப்படும். இஸ்ரோ உள்ளிட்ட இந்திய நிறுவனங்களால் பல்வேறு சோதனைகள் நடத்த ஒரு தளமாக இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும்.

    பொதுவாக செயற்கைக்கோள்களை புவிவட்ட பாதையில் கொண்டு சேர்த்த பின்னர், ராக்கெட்டுகளின் எந்திரம் விண்வெளி குப்பையாக மாறி அங்கேயே சுழன்று கொண்டு இருக்கும். ஆனால் கடந்த 2 முறையாக இஸ்ரோவின் மேம்படுத்தப்பட்ட பரிசோதனைகள் மூலம் விண்வெளி குப்பை சேருவது தடுக்கப்பட்டு வருகிறது. விண்ணில் ராக்கெட்டின் 4-வது நிலையில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின் 4 முறை நிறுத்தி சோதனை செய்யப்படுகிறது.  #ISRO #PSLVC45 #EMISAT
    Next Story
    ×