search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிதி நிறுவன மோசடி - கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனரிடம் இரண்டாவது நாளாக சி.பி.ஐ. விசாரணை
    X

    நிதி நிறுவன மோசடி - கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனரிடம் இரண்டாவது நாளாக சி.பி.ஐ. விசாரணை

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடந்த சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். #CBIgrills #KolkataPoliceCommissioner #Sharadascam
    ஷில்லாங்:

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு குறித்து விசாரிக்க கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ் குமார் தலைமையிலான சிறப்பு குழுவை மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அமைத்தார். ஆனால், இந்த வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கின் முக்கிய ஆவணங்களை ராஜீவ்குமார் அழித்து விட்டதாக குற்றம்சாட்டினர்.

    இதுதொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 3-ந்தேதி கொல்கத்தாவுக்கு வந்தனர். மேற்கு வங்காளம் மாநில போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். சி.பி.ஐ.யின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா பானர்ஜி 3 நாட்கள் தர்ணாவில் ஈடுபட்டார்.

    சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது கடமையை செய்யவிடாமல் கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்திய விவகாரத்தில் சி.பி.ஐ. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.



    இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று ராஜீவ் குமாருக்கு கடந்த 5-ந்தேதி உத்தரவிட்டது. மேகாலாயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங் நகர சி.பி.ஐ. அலுவலகத்தில் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஷில்லாங்கில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ராஜீவ் குமார் நேற்று ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ராஜீவ் குமார் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின்போது ராஜீவ் குமாரின் வக்கீல் பிஸ்வஜித் தேப்பும் உடன் இருந்தார். விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதே சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. குணால் ஜோஷுக்கும் சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி அவர் இன்று ஆஜரானார். அவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனரையும், முன்னாள் எம்.பி.யையும் நேருக்கு நேர் வைத்து ஒரே நேரத்தில் விசாரணை நடத்தி வருவதாக ஷில்லாங்கில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #CBIgrills #KolkataPoliceCommissioner #Sharadascam
    Next Story
    ×