search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக தலைவர், சகோதரர் கொலையால் காஷ்மீரில் பதட்டம்- ஊரடங்கு உத்தரவு அமல்
    X

    பாஜக தலைவர், சகோதரர் கொலையால் காஷ்மீரில் பதட்டம்- ஊரடங்கு உத்தரவு அமல்

    தீவிரவாதிகள் தாக்குதலில் பா.ஜ.க. தலைவர், சகோதரர் கொலை செய்யப்பட்டதை அடுத்து கிஸ்த்துவார், தோடா, பதேர்வா ஆகிய 3 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #JammuKashmir #Curfew
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநில பாரதிய ஜனதா செயலாளர் அனில்பரிகார் (வயது 52). இவர் காஷ்மீர் மாநிலம் கிஸ்த்துவார் மாவட்டத்தில் கிஸ்த்துவார் நகரில் உள்ள பரிகார் மோகல்லா என்ற இடத்தில் வசித்து வந்தார்.

    அவரது வீட்டின் அருகேயே ஸ்டேசனரி கடை வைத்திருந்தார். நேற்று மாலை கடையை கவனித்து வந்த அனில்பரிகார் இரவு 8 மணிக்கு வீடு திரும்பினார். அவருடன் அவரது அண்ணன் அஜித் (55) என்பவரும் வந்தார்.

    இருவரும் அங்குள்ள குறுகிய சந்து வழியாக வீட்டுக்கு வந்தனர். அப்போது அங்கு காத்திருந்த தீவிரவாதிகள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 பேருமே குண்டு பாய்ந்து கீழே சரிந்தனர்.

    அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் வழியிலேயே இறந்துவிட்டனர். அவர்களுடைய உடல்களை எடுத்து செல்வதற்கும், சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை மேற்கொள்வதற்கும் போலீஸ் அதிகாரிகள் வந்தனர்.

    ஆனால் அவர்களை பொது மக்கள் அனுமதிக்கவில்லை. போலீஸ் அதிகாரிகளை தாக்குவதற்கும் முயற்சித்தனர். இதனால் போலீசார் அங்கிருந்து விலகி சென்றுவிட்டனர்.

    பல இடங்களிலும் பொது மக்கள் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அங்கு மோசமான நிலை ஏற்பட்டது. இதையடுத்து நிலையை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் ஏ.எஸ். ராணா, ராணுவத்தை வரவழைத்தார்.


    இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் ராணுவத்தினரும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கிஸ்த்துவார், தோடா, பதேர்வா ஆகிய 3 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல ராம்பன், பானிகால், பூஞ்ச், கத்துவா, ராஜுரி ஆகிய மாவட்டங்களில் 4 பேருக்கு மேல் கூடக்கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

    காஷ்மீரில் சமீப ஆண்டுகளில் அரசியல் தலைவர்கள் கொல்லப்படுவது இதுவே முதல் முறையாகும். எனவே நிலைமை மோசமாக உள்ளது. கிஸ்த்துவார் மாவட்டம் எப்போதுமே மத மோதல்கள் அதிகமாக நடக்கும்.

    2013-ம் ஆண்டு அங்கு பயங்கர கலவரம் நடைபெற்றது. 2001-ம் ஆண்டு 17 இந்துக்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். எனவே இப்போது பா.ஜ.க. தலைவர் உள்ளிட்ட 2 பேர் கொல்லப்பட்டிருப்பதால் அங்கு மீண்டும் வன்முறை வெடிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    எனவே பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்தும்படி கவர்னரின் ஆலோசகர் விஜயகுமாரிடம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்த சம்பவத்துக்கு ராஜ்நாத்சிங், பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா, முன்னாள் முதல்-மந்திரி உமர்அப்துல்லா உள்ளிட்ட பல தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #JammuKashmir #Curfew
    Next Story
    ×