search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சரத் பவார் - தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராஜினாமா
    X

    மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சரத் பவார் - தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராஜினாமா

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எவ்வித ஊழலும் நடந்திருப்பதாக நினைக்கவில்லை என மோடிக்கு ஆதரவாக சரத் பவார் கருத்து தெரிவித்ததன் எதிரொலியாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராஜினாமா செய்துள்ளார். #TariqAnwar #SharadPawar #RafaleDeal
    மும்பை :

    ரபேல் போர் விமானம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக இடைவிடாத தாக்குதலை காங்கிரஸ் முன்னெடுத்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் பேசுகையில், மோடி மீது அபாண்டமாக குற்றம்சாட்டப்படுகிறது, ஒப்பந்தம் விவகாரத்தில் எந்தவிதமான ஊழலும் நடந்திருப்பதாக நினைக்கவில்லை என்றார்.

    இதனையடுத்து பா.ஜனதா தலைவர்களிடம் இருந்து அவருக்கு பாராட்டு குவிந்தது. மராட்டியத்தில் சிவசேனா, பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பா.ஜனதாவிற்கு போதிய பலம் கிடையாது, சிவசேனாவின் உதவியுடனே ஆட்சி தொடர்கிறது. தேசியவாத காங்கிரசையும் பா.ஜனதா பகைத்துக்கொள்ளவில்லை.

    2019 பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரிடம் இருந்து, மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்து வந்தது அனைவரது புருவத்தையும் உயரச்செய்துள்ளது. இந்நகர்வை சிவசேனாவும் விமர்சனம் செய்துள்ளது.

    பிரதமர் மோடியை சரத்பவார் புகழ்ந்ததையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் தாரிக் அன்வர் அக்கட்சிலிருந்து விலகியுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும், மக்களவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

    1999-ல் சோனியா காந்தியின் வெளிநாட்டு குடியுரிமை குறித்து பேசியதால் சங்மா, சரத் பவார், தாரிக் அன்வர் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களால் தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. அதில் தாரீக் அன்வர் முக்கியப் பொறுப்பு வகித்துவந்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தார்.

    பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு பலமுறை எம்.பி.யாக இருந்த தாரீக் அன்வர், ஒரு முறை மாநிலங்களவை எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார்.



    இதுதொடர்பாக தாரிக் அன்வர் கூறுகையில், ’தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகிவிட்டேன். கடந்த 20 ஆண்டுகளாக சரத் பவாருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். ரபேல் விவகாரத்தில் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒருமித்த கருத்தோடு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

    ஆனால், மோடிக்கு ஆதரவாக சரத் பவார் கருத்து தெரிவித்தன் மூலம் ரபேல் விவகாரத்தில் எதிர்கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லாதது போன்ற தவறான தோற்றம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

    சரத் பவாரின் கருத்துக்களோடு முற்றிலும் வேறுபடுவதால் கட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியாத சூழலில் ராஜினாமா செய்கிறேன். மக்களிடம் ஒன்றை கூறிவிட்டு, செயல்பாடுகளில் மற்றொன்றாக இருக்கக் கூடாது’ என அவர் தெரிவித்தார். #TariqAnwar #SharadPawar #RafaleDeal
    Next Story
    ×