search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் மீண்டும் ஜிகா வைரஸ் பீதி? - ராஜஸ்தான் பெண்ணுக்கு நோய் பாதிப்பு கண்டுபிடிப்பு
    X

    இந்தியாவில் மீண்டும் ஜிகா வைரஸ் பீதி? - ராஜஸ்தான் பெண்ணுக்கு நோய் பாதிப்பு கண்டுபிடிப்பு

    ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்முறையாக 85 வயது பெண்ணுக்கு ஜிகா நோய்த்தொற்று ஏற்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது. #Zikavirus #RajasthanWoman
    ஜெய்ப்பூர்:

    டெங்கு மற்றும் சிக்கன் குனியாவுக்கு காரணமான கொசுக்களின் வாயிலாக கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் தோன்றிய ஜிகா நோயானது ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட 24 அமெரிக்க நாடுகளிலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில நாடுகளிலும் படுவேகமாக பரவியது.  

    தாயின் கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை இந்த நோய் பாதிப்படையச் செய்கிறது. இதனால், ஜிகா பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலைகளுடன் காணப்படுகின்றன. இந்நோயானது, சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும் ‘ஏடிஸ்’ கொசுக்களால் பரவுவதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், செக்ஸ் மூலமாகவும் ஜிகா பரவுவதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. 

    இந்நோயை குணப்படுத்தும் மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஏற்கனவே பிரேசில் நாட்டில் ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஜிகா நோய் பாதிப்புடன் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    தீராத காய்ச்சல், கண்கள் சிவப்பாக மாறி இருப்பது, மூட்டுவலி, சோர்வு, தலைவலி போன்றவை இந்த நோய்க்கான ஆரம்பகட்ட அறிகுறிகளாகும். கடந்த 2017-ம் ஆண்டில் குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத் நகரை சேர்ந்த மூன்று பேருக்கு ஜிகா நோய்த்தொற்று ஏற்பட்டது. 

    இதேபோல், தமிழ்நாட்டில் முதல் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டம், நாட்றாம்பள்ளி பகுதியை சேர்ந்த 27 வயது நபருக்கு ஜிகா நோய்த்தொற்று ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தனர்.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த 85 பெண்ணுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக சமீபத்தில் தெரியவந்துள்ளது.

    தொடர்ந்து காய்ச்சல், மூட்டுவலி, சோர்வு, தலைவலி போன்றவற்றால் அவதிப்பட்டு வந்த அந்தப் பெண், இங்குள்ள சாவாய் மான் சிங் மருத்துவமனையில் கடந்த 11-9-2018 அன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    பின்னர், அவரது சிறுநீர் உள்ளிட்டவை கடந்த 18-ம் தேதி புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பட்டன. பரிசோதனை முடிவில் அவருக்கு ஜிகா நோய்த்தொற்று உள்ளது தெரியவந்தது. இதைதொடர்ந்து உரிய சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலை தேறிய அவர் சில நாட்களுக்கு பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பான தகவல் ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். #Zikavirus  #RajasthanWoman
    Next Story
    ×