search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக முதல்வராக பதவியேற்று 100 நாட்கள் நிறைவு - மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக ராகுலுடன் குமாரசாமி அலோசனை
    X

    கர்நாடக முதல்வராக பதவியேற்று 100 நாட்கள் நிறைவு - மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக ராகுலுடன் குமாரசாமி அலோசனை

    கார்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து மரியாதை நிமித்தமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவர் சந்தித்து பேசினார். #Kumaraswamy #RahulGandhi
    புதுடெல்லி :

    கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. அம்மாநில முதல்வராக பதவியேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைவதை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் குமாரசாமி சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி அவர்களிடம் குறிப்பிட்டுள்ளதாவது :-

    கர்நாடக முதல்வராக பதவியேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது, இதற்காக வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ராகுல் காந்தியை சந்தித்து பேசினேன். இந்த சந்திப்பின் போது கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் மற்றும் இன்னும் நிரப்படாமல் உள்ள பல்வேறு வாரியத் தலைவர்கள் பதவிகளை நிரப்புவது பற்றி விரைவாக முடிவெடுக்கும்படி ராகுல் காந்தியிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

    கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாக ராகுல் மகிழ்ச்சி தெரிவித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், அடுத்த முதல்வராவேன் என சமீபத்தில் சித்தராமையா கூறியது பற்றி செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த குமாரசாமி, ’சித்தராமையா ஒரு தலைவர் அவர் முதல்வராக ஆசைப்படுவதில் தவறு இல்லை. கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவரான சித்தராமையாவின் தலைமையின் கீழ் கூட்டணி ஆட்சி தற்போது பாதுகாப்பாக உள்ளது. ராகுலுடனான சந்திப்பில் சித்தராமையா கூறிய கருத்தை பற்றி விவாதிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

    மேலும், கர்நாடக மந்திரிசபையில் முதல்வர், துணை முதல்வர் உள்பட காங்கிரசை சேர்ந்த 16 பேர், மஜத-வை சேர்ந்த 10 பேர் என் மொத்தம் 26 பேர் மந்திரிகளாக உள்ளனர். விதிமுறைகளின்படி மேலும் 4 பேர் புதிய மந்திரிகளாக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராகுல் காந்தியுடனான சந்திப்பிற்கு பிறகு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மற்றும் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங் மற்றும் ஜிதேர்ந்திர சிங் ஆகியோரையும் குமாரசாமி சந்தித்து பேசினார். #Kumaraswamy #RahulGandhi
    Next Story
    ×