search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் போனில் பேச மறுத்த மாணவியை உயிரோடு எரித்த வாலிபர்கள்
    X

    உ.பி.யில் போனில் பேச மறுத்த மாணவியை உயிரோடு எரித்த வாலிபர்கள்

    உத்தரபிரதேசத்தில் போனில் பேச வற்புறுத்தியதை தந்தையிடம் கூறிய மாணவியை வாலிபர்கள் உயிரோடு எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மீரட்:

    உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் சர்தானா நகரம் உள்ளது. இந்த ஊரை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தினமும் மாலையில் வீட்டில் இருந்து கோச்சிங் சென்டருக்கு டியூசன் செல்வது வழக்கம்.

    அப்போது வழியில் சில இளைஞர்கள் நின்று கொண்டு அந்த மாணவிக்கு தினமும் தொல்லை கொடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் டியூசனுக்கு சென்று வீடு திரும்பிய அந்த மாணவியை இடைமறித்த வாலிபர்கள் கையில் ஒரு செல்போனை திணித்தனர்.

    இந்த போனில் நள்ளிரவு நேரத்தில் தங்களுடன் பேசும்படி அவர்கள் கூறினார்கள். பின்னர் மாணவி அங்கிருந்து வீட்டுக்கு வந்துவிட்டாள். தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறி அந்த வாலிபர்கள் கொடுத்த செல்போனையும் தந்தையிடம் கொடுத்தாள்.

    உடனே மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் கோபம் அடைந்தனர். அவர்கள் போனை கொடுத்த வாலிபர் ஒருவரின் வீட்டுக்கு சென்று அந்த வாலிபரின் பெற்றோரிடம் புகார் செய்தனர். மேலும் கடுமையான எச்சரிக்கையும் செய்துவிட்டு வந்தனர்.

    இது, அந்த வாலிபருக்கும், அவது நண்பர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் 6 பேர் மாணவியின் வீட்டுக்கு வந்தனர்.

    அப்போது வீட்டில் பெற்றோர்கள் இல்லை. மாணவி மட்டும் தனியாக இருந்தாள். அவளிடம் சென்று எப்படி எங்களை பற்றி புகார் செய்யலாம்? என கூறி தகராறு செய்தனர்.

    திடீரென அவர்கள் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை எடுத்து மாணவி மீது ஊற்றி தீ வைத்தனர். இதில், அவளது உடல் பற்றி எரிந்தது. வீட்டிலும் தீப்பற்றி கொண்டது. பின்னர் வாலிபர்கள் ஓடி விட்டனர். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தீயை அணைத்தனர்.

    உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.

    மாணவி மீது தீ வைத்தவர்கள் ராஜ்வன்ஸ் பக்டி, தேவேந்திர பக்டி, ரோகித் சைனி, கச்சிராலா சைனி, அமன், தீபக் என்று தெரிய வந்தது.

    போலீசார் அவர்களில் 2 பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

    2004-ம் ஆண்டு இந்த ஊரில் இதே போல் பாலியல் தொல்லை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு பெரும் கலவரம் ஏற்பட்டது. 2 பேர் கொல்லப்பட்டனர். பல நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

    சர்தானா நகரில் பெண்களை கேலி செய்வது, பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதாக அந்த ஊர் மக்கள் புகார் கூறி உள்ளனர்.
    Next Story
    ×