search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் மாற்று மதத்தினருக்கு அன்னதானம் வழங்க தடை
    X

    குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் மாற்று மதத்தினருக்கு அன்னதானம் வழங்க தடை

    குருவாயூர் கோவில் தந்திரியின் எதிர்ப்பை தொடர்ந்து கிருஷ்ணன் கோவிலில் இன்று முதல் இந்துக்களுக்கு மட்டும்தான் அன்னதானம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில், குருவாயூர் கிருஷ்ணசுவாமி கோவில் உள்பட பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கடும் கட்டுப்பாடுகள் உள்ளன.

    கேரள கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய செல்லும் ஆண் பக்தர்கள் பேண்ட், சட்டை அணிந்து செல்லக்கூடாது. அவர்கள் வேட்டி கட்டி சென்றால்தான் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல பெண்களும் நாகரீக உடைகள் அணிந்து செல்ல முடியாது. சேலை அணிந்து சென்றுதான் சாமி தரிசனம் செய்ய முடியும்.

    மேலும் பல்வேறு கோவில்களில் இந்துக்கள் அல்லாத மாற்று மதத்தினர் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சபரிமலை கோவிலில் 10 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய தடை உள்ளது. ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் ஆண் பக்தர்களுக்கு பொங்காலை திருவிழாவின் போது அனுமதி கிடையாது.

    குருவாயூர் கிருஷ்ணசாமி கோவிலிலும் இந்துக்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த கோவிலின் உள்ளே மண்டபத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அன்னதான மண்டபம் கோவிலின் வெளிப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு பக்தர்கள் தினமும் அன்னதானம் சாப்பிட்டு செல்கிறார்கள். கோவிலுக்கு வெளியே அன்னதானம் வழங்கப்படுவதால் இந்துக்கள் அல்லாத மாற்று மதத்தினரும் அங்கு உணவு சாப்பிட்டு வந்தனர்.

    இந்த நிலையில் குருவாயூர் கோவிலில் மாற்று மதத்தினருக்கு அன்னதானம் வழங்க கோவில் தந்திரி நாராயணன் நம்பூதிரி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    குருவாயூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடை பிடிக்கும் அதே கட்டுப்பாடுகளைதான் அன்னதானத்தின் போதும் கடைபிடிக்க வேண்டும். கோவிலுக்கு வெளியே அன்னதான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளதால் இந்த விதிமுறைகளை மாற்றக்கூடாது.

    வேட்டி கட்டி, செருப்பு அணியாமல் அன்னதான மண்டபத்திற்குள் பக்தர்கள் செல்ல வேண்டும். இந்து மதத்தினருக்கு மட்டும்தான் அங்கு அன்னதானம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குருவாயூர் கோவில் தந்திரியின் எதிர்ப்பை தொடர்ந்து குருவாயூர் கோவிலில் இன்று முதல் இந்துக்களுக்கு மட்டும்தான் அன்னதானம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    Next Story
    ×