search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொருளாதார குற்ற வழக்குகளில் தப்பியோடியவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய அவசர சட்டம்
    X

    பொருளாதார குற்ற வழக்குகளில் தப்பியோடியவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய அவசர சட்டம்

    பொருளாதார குற்ற வழக்குகளில் சிக்கி தப்பியோடி தலைமறைவானவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    கிங் பிஷர் நிறுவன உரிமையாளர் விஜய் மல்லைய்யா பல்லாயிரம் கோடி ரூபாயை அரசு வங்கிகளில் கடனாக பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்.

    சமீபத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த நிரவ் மோடி உள்ளிட்ட பிரபல தொழிலதிபர்கள் போலீசில் பிடிபடாமல் தலைமறைவாக உள்ளனர். ஐ.பி.எல்.கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் ஊழல் செய்து பல கோடி ரூபாய் கொள்ளையடித்த லலித் மோடி போன்றோரும் இந்திய அரசின் சட்ட நடவடிக்கைகளுக்கு பயந்து வெளிநாடுகளில் பதுங்கி உள்ளனர்.

    அவர்களை இந்தியாவுக்கு அழைத்துவந்து, விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியாத நிலை நீடித்து வருகின்றது. மேலும், இவர்களுக்கு எல்லாம் சொந்தமாக உள்நாட்டில் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்வதிலும் பல்வேறு சட்டச் சிக்கல்கள் தடைக்கற்களாக இருந்து வருகின்றன.

    இதை எல்லாம் தகர்த்து பொருளாதார குற்ற வழக்குகளில் சிக்கி தப்பியோடி தலைமறைவானவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு வகை செய்யும் மசோதா கடந்த மாதம் 12-ம் தேதி பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

    ஆனால், பட்ஜெட் கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முழுமையாக முடக்கிப் போட்டதால் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனது.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்றாக பொருளாதார குற்ற வழக்குகளில் சிக்கி தப்பியோடி தலைமறைவானவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இதைதொடர்ந்து, இந்த அவசர சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகின்றது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதாவாக அறிமுகப்படுத்தி, சட்டமாக நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்ற பின்னர் இந்த அவசர சட்டத்துக்கு முழு உயிர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews

    Next Story
    ×