search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கற்பழிப்பு வழக்கில் கைதானவரை சிறையில் சந்தித்த முன்னாள் முதல் மந்திரி
    X

    கற்பழிப்பு வழக்கில் கைதானவரை சிறையில் சந்தித்த முன்னாள் முதல் மந்திரி

    கற்பழிப்பு வழக்கில் கைதானவரை லக்னோ மாவட்ட சிறைக்கு சென்று முன்னாள் முதல் மந்திரி சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் அரசில் அமைச்சராக பதவி வகித்தவர் காயத்ரி பிரஜாபதி.

    காயத்ரி பிரஜாபதியும், அவரது உதவியாளர்களும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனது மகளுக்கும் அவர்கள் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் பெண் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், "உத்தரப்பிரதேசம் அரசில் பிரஜாபதி மந்திரியாக இருப்பதால், அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய காவல் துறை முன்வரவில்லை. எனவே, பிரஜாபதி, அவரது உதவியாளர்கள் ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  

    இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரஜாபதி உள்ளிட்டோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறும், அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறும் காவல் துறைக்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, பிரஜாபதி மற்றும் அவரது உதவியாளர்கள் மூன்று பேருக்கு எதிராக கடந்த 18-2-2017 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே, பிரஜாபதி திடீரென்று தலைமறைவாகிவிட்டார். அவரை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்யுமாறு கோர்ட் உத்தரவிட்டது. வெளிநாடு தப்பிச் செல்லாமல் தடுப்பதற்காக அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. 



    அம்மாநில தலைநகர் லக்னோவில் காயத்ரி பிரஜாபதி கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி கைது செய்யப்பட்டார். லக்னோ நகரில் உள்ள மாவட்ட சிறையில் அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை ஜாமீனில் விடுவிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

    இந்நிலையில், முன்னாள் முதல்வரான முலாயம் சிங், பிரஜாபதியை இன்று லக்னோ மாவட்ட சிறைக்கு சென்று சந்தித்தார்.

    அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த முலாயம் சிங் யாதவ், ‘’பிரஜாபதிக்கு எதிராக போலீசாரிடம் எந்த சாட்சியங்களும் இல்லை. அவருக்கு எதிராக சதிவலை பின்னப்பட்டுள்ளது. அவர் நிரபராதி. தீவிரவாதிகளை நடத்துவது போல் அவரை நடத்துகின்றனர். பா.ஜ.க அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறது. இதுதொடர்பாக பிரதமர் மோடியை சந்திப்பேன். தேவை ஏற்பட்டால் ஜனாதிபதியையும் சந்தித்து முறையிடுவேன்’’ என குறிப்பிட்டார்.
    Next Story
    ×