search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் மே 19 ஆம் தேதி 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு- தேர்தல் ஆணையம்
    X

    தமிழகத்தில் மே 19 ஆம் தேதி 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு- தேர்தல் ஆணையம்

    தமிழகத்தில் மே 19 ஆம் தேதி 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். #electioncommission #reelection
    சென்னை:

    பொதுத்தேர்தல் நடக்கும் முன்பு மாதிரி வாக்குப்பதிவை வாக்குச்சாவடி அதிகாரிகள் நடத்துவார்கள். 50 ஓட்டுகள் வரை மாதிரியாக அந்த எந்திரங்களில் போட்டுக்காட்டுவார்கள். அப்போது ஏதாவது பிரச்சினை எழுந்தால் அந்த எந்திரத்தை தூர வைத்துவிட்டு, அடுத்த எந்திரத்தை எடுப்பார்கள்.

    மறுவாக்குப்பதிவு நடத்துவதற்கு முன்பு அந்த எந்திரங்களை அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில், அவை ஏற்கனவே காலியாக உள்ளன என்பதையெல்லாம் காட்டிவிட்டுத்தான் வாக்குப்பதிவை நடத்துவோம்.

    நடந்து முடிந்துள்ள பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேனி, ஈரோடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 15 பாராளுமன்ற தொகுதிகளுக்குள் (13 மாவட்டங்களுக்குள்) வரும் 46 வாக்குச்சாவடிகளில் 3 விதமான தவறுகள் நடந்துள்ளன.

    மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டதும், அந்த வாக்குப்பதிவை கட்டுப்பாட்டு எந்திரத்தில் இருந்து அழிக்க வேண்டும். அதன்பிறகு, ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் விழுந்து கிடக்கும் துண்டுச்சீட்டுகளை எடுத்து அவற்றை தேர்தல் ஆணையம் அளித்துள்ள உறையில் போட்டு அதை மூடி வைத்துவிட வேண்டும். அதன் பின்னர் அதை வாக்குப்பதிவுக்காக கொண்டு வரவேண்டும். இது வழக்கமான நடைமுறை.

    ஆனால் நடந்து முடிந்த தேர்தலில், சில வாக்குச்சாவடிகளில் கட்டுப்பாட்டு எந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட மாதிரி வாக்குகளையும் அழிக்கவில்லை; ஒப்புகைச் சீட்டுகளை அந்த எந்திரத்தில் இருந்து எடுக்கவும் இல்லை.

    மற்ற சில இடங்களில் கட்டுப்பாட்டு எந்திரத்தில் பதிவான மாதிரி வாக்குகளை அழித்திருக்கின்றனர். ஆனால் ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் கிடந்த சீட்டுகளை எடுக்காமல் விட்டுவிட்டனர். மேலும் சில இடங்களில், ஒப்புகைச் சீட்டு எந்திரங்களில் இருந்த சீட்டுகளை அப்புறப்படுத்தி உள்ளனர். ஆனால் கட்டுப்பாட்டு எந்திரங்களில் பதிவு செய்யப்பட்டு இருந்த மாதிரி வாக்குகளை அழிக்கத் தவறிவிட்டனர்.

    எனவே இது வாக்கு எண்ணிக்கையின்போது பிரச்சினைகளை உருவாக்கும். கட்டுப்பாட்டு எந்திரத்தில் ஒரு எண்ணிக்கையும், ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் வேறு எண்ணிக்கையும் காட்டும். எனவே இப்படி தவறு நடந்த 46 வாக்குச்சாவடிகள் பற்றிய தகவலை தேர்தல் நடத்தும் அதிகாரி, தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இருந்தனர்.

    இதுபற்றிய அறிக்கையை தேர்தல் கமிஷனுக்கு கடந்த மாதம் 29-ந் தேதி அனுப்பி வைத்து இருக்கிறோம். இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டால் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    தர்மபுரி, கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் மொத்தம் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நாங்கள் பரிந்துரைத்திருக்கிறோம். அங்கு நடந்த பிரச்சினைகள் வேறு. அங்கு போதிய அளவில் எந்திரங்கள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில், தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று நேற்று இரவு தேர்தல் கமிஷன் அறிவித்தது.

    அதாவது தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளிலும், தேனி பாராளுமன்ற தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூர், ஈரோடு, கடலூர் பாராளுமன்ற தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும் பாராளுமன்றத்துக்கு இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறும் வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் உள்ள காமராஜர் நகர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் 12-ந் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. #electioncommission #reelection
    Next Story
    ×