search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு இளைஞர்கள் கலெக்டரிடம் மனு
    X

    ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு இளைஞர்கள் கலெக்டரிடம் மனு

    விசுவக்குடியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி இளைஞர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். இந்நிலையில் வேப்பந்தட்டை தாலுகா விசுவக்குடி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் திரண்டு வந்து கலெக்டர் சாந்தாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், விசுவக்குடியில் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியினை மாவட்ட நிர்வாகம் வழங்கியது. பின்னர் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருந்ததால், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது அரசு அதிகாரிகள் கடந்த மாதம் 31-ந் தேதிக்குள் ஜல்லிக்கட்டு நடத்தியிருக்க வேண்டும். இனிமேல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடையாது என்று கூறி வருகின்றனர். எனவே மீண்டும் விசுவக்குடியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது.

    இதேபோல் குன்னம் தாலுகா புதுவேட்டக்குடி, காடூரை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் எங்கள் ஊர்களில் சட்ட விரோதமாக மது பானங்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார். மேலும் அவர் போலி மது பானங்களை விற்பனை செய்து வருகிறார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஏற்கனவே கலெக்டரிடம் கொடுத்த மனுவின் பேரில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் எங்கள் பகுதிக்கு வந்து அந்த நபரை விசாரிப்பதற்காக அழைத்து சென்று சில மணி நேரத்தில் திரும்பி அனுப்பி விட்டனர். அதன் பிறகு அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மது பானங்களையும், போலி மது பானங்களையும் 24 மணி நேரமும் விற்பனை செய்து வருகின்றனர். இதையடுத்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீசாரிடம் புகார் கொடுத்தோம். ஆனால் இதுவரை போலீசார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கலெக்டர் மது விற்பனையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 282 மனுக்களை கலெக்டர் சாந்தா பெற்றுக்கொண்டார். பின்னர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அந்த மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து, குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் 20 ஆண்டு காலமாக எந்தவித விபத்துமின்றி சிறப்பான முறையில் வருவாய்த் துறையில் வாகன டிரைவராக பணிபுரிந்து வரும் விஜயகுமாரை பாராட்டி தமிழக அரசால் வழங்கப்பட்ட 4 கிராம் தங்க நாணயத்தை கலெக்டர் சாந்தா வழங்கி பாராட்டினார்.

    நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழக்கத்தை விட மனு கொடுக்க வந்திருந்த பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் மனுவினை கணினியில் பதிவு செய்யும் இடத்தில், நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து பொதுமக்களை மனுவினை பதிவு செய்து விட்டு சென்றனர். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×