search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகரில் வீடு புகுந்து மது-பணம் பறித்ததாக போலீஸ்காரர் மீது புகார்
    X

    விருதுநகரில் வீடு புகுந்து மது-பணம் பறித்ததாக போலீஸ்காரர் மீது புகார்

    விருதுநகரில் வீடு புகுந்து மதுபாட்டில்கள் மற்றும் பணம் பறித்துச் சென்றதாக போலீஸ்காரர் மீது புகார் கூறப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் வீர குரும்பன்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 65). இவர் சூலக்கரை போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    “எனது அக்காள் மகள் திருமணத்தை முன்னிட்டு, நண்பர்களுக்கு பார்ட்டி கொடுப்பதற்காக வீட்டில் 95 மது பாட்டில்கள் வாங்கி வைத்திருந்தேன்.

    இந்த நிலையில் சூலக்கரை போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் வீட்டிற்கு வந்து திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக புகார் வந்துள்ளது. எனவே விசாரணைக்கு வா” என அழைத்தார்.

    இதனைத் தொடர்ந்து நான் போலீஸ் நிலையம் புறப்பட்டபோது, ‘அங்கு வந்தால் உன்னை கைது செய்து 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்’ என மிரட்டிய அவர், ரூ.20 ஆயிரம் கொடுத்தால் இங்கேயே பிரச்சனையை முடித்து விடலாம் என்றார்.

    நான் பணம் இல்லை என கூறிய போது, தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்ததோடு, வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த 95 மது பாட்டில்கள் மற்றும் மருமகள் பிரசவச் செலவுக்காக வைத்திருந்த ரூ.13 ஆயிரத்து 500 ஆகியவற்றை எடுத்துச் சென்று விட்டார்.

    மேலும் மீதி பணத்தை மாலையில் தர வேண்டும் எனக்கூறி மிரட்டல் விடுத்துச் சென்றார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து சில போலீசார் கூறுகையில், மாரி முத்துவிடம் மாதந்தோறும் குறிப்பிட்ட போலீஸ்காரர் மாமூல் பெற்றுள்ளார். தற்போது பிரச்சனை ஏற்பட்டு போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுக்க மாரிமுத்து சென்றார். ஆனால் வழி மறித்து ரூ.10 ஆயிரம் வரை கொடுத்து, புகார் கொடுக்க விடாமல் மிரட்டி உள்ளனர்.

    இந்த சம்பவத்தில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தனிப்பிரிவு போலீசாரும் உடந்தையாக இருக்கலாம். எனவே புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றனர்.
    Next Story
    ×