search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் - உயர்மட்டப் பாதையில் அமையும் 80 ரெயில் நிலையங்கள்
    X

    இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் - உயர்மட்டப் பாதையில் அமையும் 80 ரெயில் நிலையங்கள்

    இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில், உயர்மட்டப் பாதையில் 80 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் முடிவடைந்து பயணிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

    தினமும் 90 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர். பயணிகளை அதிகப்படுத்துவதற்கு இணைப்பு போக்குவரத்து வசதியினை மெட்ரோ ரெயில் நிர்வாகம் விரிவாக்கம் செய்து வருகிறது.

    ஷேர் ஆட்டோ, கால்டாக்சி, மாநகர சிறிய பஸ் மற்றும் சைக்கிள் போன்றவற்றின் மூலம் மெட்ரோ ரெயில் பயணிகள் நிலையத்தில் இருந்து வெளியே செல்ல போக்குவரத்து வசதியை படிப்படியாக ஏற்படுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மாதவரம்- சோழிங்கநல்லூர், மாதவரம்-சிறுசேரி சிப்காட், பூந்தமல்லி- கலங்கரை விளக்கம் ஆகிய 3 வழித்தடங்களில் 119 கி.மீ. தூரத்திற்கு இத்திட்டப் பணிகள் ரூ.85 ஆயிரத்து 47 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளன.

    தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் திட்டத்திற்கும் 2-வது கட்ட திட்டத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

    குறைவான இடத்தில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

    இத்திட்டத்தில் அமைய உள்ள ரெயில் நிலையங்கள், பாதைகள் அனைத்தையும் நிர்வாகம் ஆய்வு செய்து நவீன கட்டுமான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி குறுகிய இடத்தில் கூட மெட்ரோ ரெயில் நிலையம் அமையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    2-வது கட்ட திட்டத்தில் 128 ரெயில் நிலையங்கள் அமைகின்றன. இவற்றில் 80 நிலையங்கள் உயர் மட்டப் பாதையில் கட்டப்படுகிறது. மீதமுள்ள 48 நிலையங்கள் பூமிக்கு அடியில் நிறுவப்படுகின்றன.

    தரைப்பகுதியில் இருந்து 11 மாடி உயரத்திற்கு மேல் மெட்ரோ ரெயில் பாதையும், நிலையங்களும் அமைக்கின்றன. “கேன்டில் லீவர்” என்று சொல்லக் கூடிய கட்டுமான தொழில்நுட்பம் இதில் பயன்படுத்துகின்றனர்.

    இந்த முறையில் சாலையின் நடுவே ஒரு பக்கம் எழுப்பப்படும் துண்களின் பலத்தில்தான் ரெயில் நிலையம் கட்டப்படுகிறது. ராட்சத தூண்கள் ரெயில் மற்றும் ரெயில் பாதையை தாங்கி நிற்பதோடு நிலையத்தையும் தாங்கி நிற்கிறது.

    இந்த தூண்கள் பயணிகள் செல்லும் எஸ்கலேட்டர் அல்லது படிக்கட்டு போன்றவற்றையும் தாங்கும் வகையில் நிறுவப்படுகிறது. ஐதராபாத் நகரில் அமைந்துள்ள மெட்ரோ ரெயில் திட்டத்தில் இந்த நவீன முறை பின்பற்றப்பட்டு 63 நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.

    அதே போல் சென்னையிலும் சாலைக்கு நடுவே வானத்தில் பறப்பது போல மெட்ரோ ரெயில் நிலையங்கள் இத்திட்டத்தில் வழியாக கட்டப்பட உள்ளன.

    இந்த “கேன்டில் லீவர்” ஸ்டைல் ரெயில் நிலையங்கள் குறுகிய இடத்தில் நேர்த்தியாக கட்ட முடியும். சென்னை போன்ற பெருநகரங்களில் நிலம் கையகப்படுத்துவதில் பெரும் பிரச்சனை ஏற்படுவதை தடுக்க இத்திட்டம் உதவுகிறது.

    முதல் கட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களை விட 2-வது கட்டத்தில் அமையும் நிலையங்களை மிக எளிதில் நடந்து கடக்க முடியும். சாலையின் நடுவே மிக உயரத்தில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைந்தாலும் அங்கு செல்ல சாலையின் ஒரு புறத்தில் பயணிகள் செல்ல வசதி செய்யப்படும்.

    மாதவரம்-சோழிங்கநல்லூர் மற்றும் மாதவரம்- புறநகர் பஸ் நிலையம் (சி.எம்.பி.டி.) வரை உள்ள 52 கி.மீ. தூரமுள்ள இந்த வழித்தடத்தை அடுத்த ஆண்டு தொடங்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 2025-ம் ஆண்டில் இத்திட்டத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறியதாவது:-

    இரண்டாவது திட்டத்தில் உயர்மட்ட பாதையில் ரெயில் நிலையங்கள் அமைக்க கேன்டில் லீவர் முறை பின்பற்றப்படுகிறது. இந்த முறையில் நிறைய இடம் தேவைப்படாது.

    குறைவான அளவு இடத்தில் பயணிகள் வந்து செல்ல வசதி செய்யப்படும். சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது. இந்த முறையின் மூலம் இடம் கையகப்படுத்துவதில் பெரிய அளவு பிரச்சனை ஏற்படாது. கட்டுமான பணிக்கான காலம் மற்றும் செலவு குறையும், என்று தெரிவித்துள்ளது.
    Next Story
    ×