search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் ஏரியில் குழாய் மூலம் தண்ணீர் உறிஞ்சுவது நிறுத்தம்
    X

    புழல் ஏரியில் குழாய் மூலம் தண்ணீர் உறிஞ்சுவது நிறுத்தம்

    புழல் ஏரி தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டதாலும் தண்ணீர் எடுப்பது நிறுத்தப்பட்டதாலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பணிகளில் பெரும் பாதிப்பு உருவாகும்.
    சென்னை:

    புழல் ஏரி கோடை வெயிலால் வறண்டு போனதால் ராட்சத குழாய் மூலம் தண்ணீர் உறிஞ்சுவது நிறுத்தப்பட்டது.

    சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் புழல் ஏரி ஒன்றாகும்.

    பருவ மழை பொய்த்ததாலும், கடும் கோடை வெயிலாலும் புழல் ஏரி தண்ணீர் இன்றி வறண்டது. 3,300 மில்லியன் கன அடி கொண்ட புழல் ஏரியில் தற்போது 3 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

    புழல் ஏரியின் பெரும் பகுதிகள் வறண்டதால் குடிநீருக்காக இந்த ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரிய நீரேற்று நிலையத்துக்கு குழாய் மூலம் தண்ணீர் எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

    இதனால் ஏரியில் ஆங்காங்கே குட்டை போல் தேங்கி உள்ள தண்ணீர் தற்காலிக கால்வாய்கள் மூலம் புழல் ஏரியில் உள்ள ஜோன்ஸ் டவர் அருகே ஒன்று திரட்டி அங்கிருந்து ராட்சத மோட்டார் மற்றும் குழாய்கள் மூலம் கடந்த 1½ மாதங்களாக உறிஞ்சி எடுக்கப்பட்ட தண்ணீர் சென்னைக்கு குடிநீருக்காக அனுப்பப்பட்டது.

    தற்போது குழாய் மூலம் உறிஞ்சி எடுக்க முடியாத அளவுக்கு தண்ணீர் குறைந்துவிட்டதால் புழல் ஏரியில் நேற்று முதல் தண்ணீர் உறிஞ்சு எடுப்பதை சென்னை குடிநீர் வாரியம் நிறுத்தியது.

    இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    புழல் ஏரியில் தற்காலிகமாக தண்ணீர் உறிஞ்சுவது நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அளவில் தண்ணீர் வந்தவுடன் சென்னை குடிநீருக்காக ராட்சத குழாய்கள் மூலம் மீண்டும் தண்ணீர் உறிஞ்சப்படும்.

    கோடை வெயிலால் புழல் ஏரியில் தண்ணீர் உறிஞ்ச முடியாத அளவுக்கு வறண்டுவிட்டது. சேறும் சகதியுமாக உள்ளதால் குழாய்கள் மூலம் தண்ணீர் உறிஞ்ச முடியவில்லை. புழல் ஏரிக்கு தண்ணீர் வந்ததும் மீண்டும் குழாய்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புழல் ஏரி தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டதாலும் தண்ணீர் எடுப்பது நிறுத்தப்பட்டதாலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பணிகளில் பெரும் பாதிப்பு உருவாகும். தண்ணீர் தட்டுப்பாட்டால் சென்னை மக்கள் மேலும் அவதி அடைவார்கள்.

    Next Story
    ×