search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் 2 மணி நேரமாக அறிவிக்கப்படாத மின்தடை - பொதுமக்கள் அவதி
    X

    குமரி மாவட்டத்தில் 2 மணி நேரமாக அறிவிக்கப்படாத மின்தடை - பொதுமக்கள் அவதி

    குமரி மாவட்டத்தில் 2 மணி நேரமாக அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மதியம் நேரங்களில் அனல்காற்று வீசுகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்தநிலையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் வீட்டிற்குள் தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதியவர்கள், குழந்தைகள் பெரும் பரிதவிப்பிற்கு ஆளாகி வருகிறார்கள்.

    குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில்அறிவிக்கப்படாத மின்தடை இருந்து வருகிறது. நேற்றும் இரவு 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

    இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும், 10 மணியில் இருந்து 11 மணி வரையிலும் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் நாகர்கோவில், கொட்டாரம், சாமித்தோப்பு, கரும்பாடு, தென்தாமரைகுளம், சுசீந்திரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    அறிவிக்கப்படாத மின்தடைக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு 12 மணி முதல் அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. அதேபோல் நேற்று காலை முதல் மாவட்டத்தில் பல இடங்களில் பல மணி நேரமாக அறிவிக்கப்படாத மின் தடை செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு 9 மணிக்கும் தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்தது. தற்போது மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள் இரவு தூங்க முடியாமல் அதிகளவு பாதிப்பு அடைந்துள்ளனர். இதுதொடர்பாக பொதுமக்கள் என்னை தொடர்பு கொண்டு புகார் செய்தனர்.

    குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மின் வெட்டு மின் வாரிய அதிகாரிகளின் அலட்சியம், நிர்வாக சீர்கேட்டால் தான் ஏற்பட்டுள்ளதாக எண்ணத் தோன்றுகிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மின் வெட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும். தொடரும் பட்சத்தில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பொதுமக்களை திரட்டி அனைத்து மின் வாரிய அலுவலகங்களிலும் அரிக்கேன் விளக்கு ஏந்தி போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி கொள்கை விளக்க அணி மாநில நிர்வாகி நந்தகோபால் கூறுகையில், அறிவிக்கப்படாத மின்தடை மக்களை பாதிப்படைய செய்துள்ளது. மின்தடை செய்யும் நேரங்களை முறையாக அறிவித்து அதை செயல்படுத்த வேண்டும். அறிவிக்கப்படாத மின் தடையால் வியாபாரிகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். பொதுமக்களும் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். எனவே மின்வாரிய அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் மின் வினியோகம் தடை பெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×