search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆற்காடு- ஆரணியில் குடிநீர் கேட்டு பஸ்சை சிறைபிடித்து மறியல்
    X

    ஆற்காடு- ஆரணியில் குடிநீர் கேட்டு பஸ்சை சிறைபிடித்து மறியல்

    ஆற்காடு மற்றும் ஆரணியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த ஆயிலம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பு பகுதிக்கு கடந்த 2 மாதங்களாக குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் ஊராட்சி செயலாளர் சரவணன் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் உரிய நடவடிக்கை எதும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்து இன்று காலை ஆற்காடு அருங்குன்றம் சாலையில் மறியல் செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த பஸ்சை சிறைபிடித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, ரத்தினகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்த மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:-

    குடிநீர் வழங்காததால் நாங்கள் புதூர், ராமாபுரம், கீழ்குப்பம், அருங்குன்றம், கவரபாளையம், மாலைமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தோம். தற்போது அவர்கள் தண்ணீர் எடுக்ககூடாது என கூறிவிட்டனர். இதனால் குடிக்ககூட தண்ணீர் இல்லாமல் அவதி அடைந்து வருகிறோம். எனவே குடிநீர் வழங்க அதிகாரிகள் உறுதி அளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் சமாதான பேச்சுவார்த்தையை தொடர்ந்து 2 மணி நேரம் நடந்த மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ஆரணி அடுத்த மாமண்டூர் காலனியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக 3 போர்வெல்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

    கடும் வறட்சி காரணமாக 2 போர்வெல்களில் தண்ணீர் வற்றியது. இதனால் ஒரே போர்வெல்லில் இருந்து குடிநீர் வழங்கி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இன்று காலை ஆரணி செய்யார் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஆரணி டி.எஸ்.பி. செந்தில், இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மறியலால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. அப்போது ஆரணி செய்யார் சாலையில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் எங்களுக்கு இன்று தேர்வு நடைபெறுகிறது. எனவே எங்களது பஸ்சை மட்டும் விட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வழிவிட மறுத்து விட்டனர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

    இதையடுத்து குடிநீர் வழங்க இன்றே நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து சுமார் 2½ மணி நேரம் நடந்த மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×