search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கை மாவட்டத்தில் 22 ஆயிரம் இளம் வாக்காளர்கள் ஓட்டு போடுகிறார்கள்- கலெக்டர் தகவல்
    X

    சிவகங்கை மாவட்டத்தில் 22 ஆயிரம் இளம் வாக்காளர்கள் ஓட்டு போடுகிறார்கள்- கலெக்டர் தகவல்

    பாராளுமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை 22 ஆயிரம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். #LSPolls
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் மற்றும் மானா மதுரை சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.

    தேர்தல் நன்னடத்தை விதி நடைமுறைக்கு வந்த 24 மணி நேரத்தில் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மற்றும் மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், 12 பறக்கும் படை குழுவும், 12 நிலையான கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த குழுவானது வாகன தணிக்கை மேற்கொள்ளும். தேர்தல் ஆணைய அறிவுரைப்படி வாகனங்களில் செல்பவர்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வைத்திருந்தால் அதற்குரிய ஆவணங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும்.

    மேலும் தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க தேர்தல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு 1950 கட்டணமில்லா தொலைபேசி சேவை 24 மணி நேரமும் இயங்கும். இதுமட்டுமன்றி மாவட்டத்தில் 10 இடங்களில் சோதனைச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகளையும் காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

    அதேபோல் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தேர்தல் நன்னடத்தை விதிமுறை முடியும் வரை காவல் நிலையத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடி என 122 மையங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குப் பதிவு மையங்களுக்கு மைக்ரோ அப்சர்வர் தலைமையில் மத்திய காவல் பிரிவு பணிகளை மேற்கொள்வார்கள்.

    தேர்தல் குறித்த சுவர் விளம்பரங்களை பொறுத்தவரை நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளுக்கு அனுமதி கிடையாது. ஊராட்சிப் பகுதிகளில் விளம்பர செய்யக்கூடிய இடத்திற்கு இடத்தின் உரிமையாளர் அனுமதி பெற்று அனுமதிச் சான்றின் நகலை அலுவலகத்தில் காண்பித்து அனுமதி பெற்ற பின்னர் தேர்தல் குறித்த சுவர் விளம்பரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    தேர்தல் பணிக்காக 6300 பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுகிறார்கள். மேலும் பணியாளர் தேவைப்பட்டால் கூடுதலாக நியமிக்க பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    பாராளுமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை 22 ஆயிரம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமபிரதீபன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×