search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 8 கடைகளுக்கு அபராதம்
    X

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 8 கடைகளுக்கு அபராதம்

    விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 8 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
    விழுப்புரம்:

    தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள்தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இதை கண்காணிக்கும் வகையில் மாவட்டந்தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்க அதனை கண்காணித்து அபராதம் விதித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று விழுப்புரம் நகரில் நான்குமுனை சந்திப்பில் இருந்து பழைய பஸ் நிலையம், எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதி, நேருஜி சாலை, திரு.வி.க. சாலை, காமராஜர் வீதி, கே.கே. சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகள், ஓட்டல்கள் என்று அனைத்து கடைகளிலும் நகராட்சி பொறியாளர் சுரேஷ்குமார், நகர்நல அலுவலர் ராஜா, சுகாதார ஆய்வாளர்கள் செல்வராஜ், ரமணன், மேற்பார்வையாளர் இளங்கோ மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஸ்டாலின்ராஜரத்தினம் ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையின்போது, விழுப்புரம் காந்தி சிலை அருகே உள்ள ஒரு ஓட்டலில் பிளாஸ்டிக் பையில் சாம்பார், ரசம், மோர் உள்ளிட்டவை பார்சல் செய்து வைக்கப்பட்டிருந்தது. அதனை கண்டுபிடித்த அதிகாரிகள், அவற்றை பறிமுதல் செய்ததோடு அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    இதேபோல் பிரியாணி கடை, பழக்கடை, இனிப்பு கடை, மளிகை கடை என 8 கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதை அதிகாரிகள் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்ததோடு அந்த கடைகளுக்கும் அபராதம் விதித்தனர்.

    இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க அனைத்து கடைகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்றைய தினம் (நேற்று) மட்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 8 கடைகளுக்கு ரூ.14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகையை ஓரிரு நாளில் நகராட்சி அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் அந்த கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும். எனவே அரசின் தடை உத்தரவை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற அதிரடி சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
    Next Story
    ×