search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி பெயரை முன்மொழிந்தது ஏன்?- முக ஸ்டாலின் விளக்கம்
    X

    பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி பெயரை முன்மொழிந்தது ஏன்?- முக ஸ்டாலின் விளக்கம்

    சென்னையில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி பெயரை முன்மொழிந்ததது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். #DMK #MKStalin #Congress #RahulGandhi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    எப்போது எதைச் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அப்போது அதனைக் கச்சிதமாகச் செய்வதில் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் தலைவர் கலைஞர்.

    அவர் சிலையாக மட்டுமல்ல, நம் சிந்தனையிலும் நிறைந்திருப்பதால்தான், உங்களில் ஒருவனான நான் அந்த சிலை திறப்பு விழாவின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது, “மத்தியிலே நடைபெறும் “சேடிஸ்ட் மோடி” தலைமையிலான பாசிச-நாசிச ஆட்சியை வீழ்த்தி ராகுல்காந்தியை முன்னிறுத்தி, அவரது கரங்களை வலுப்படுத்துவோம் என்பதை பிரகடனப்படுத்தினேன்.

    இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைத்து- மத நல்லிணக்கத்தைச் சிதைத்து- பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் தகர்த்துக் கொண்டிருப்பதுடன், தமிழ்நாட்டை ஒட்டு மொத்தமாக வஞ்சிக்கும் மோடி அரசை வீழ்த்திட வேண்டுமென்றால் அதற்குரிய வலிமை கொண்ட வரும், பா.ஜ.க.வின் கோட்டையாக இருந்த மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமையக் காரணமாக அமைந்தவருமான ராகுல் காந்தியை முன்னிறுத்துவது தான் மதசார்பற்ற சக்திகளின் ஒருங்கிணைப்புக்கு ஏற்றதாக இருக்கும் என்ற அடிப்படையிலே உரக்கச் சொன்னேன்.

    தலைவர் கலைஞர் காட்டிய வழி, நேரு குடும்பத்தில் இந்திராவால் தொடங்கி இன்றுவரை நல்ல நட்பினைக் கொண்டுள்ளது. தி.மு.க. ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அதில் உறுதியாக நின்றுள்ளது. அந்த ஆதரவும் எதிர்ப்பும் நாட்டின் நலன் கருதியே எடுக்கப்பட்டவை.

    இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வங்கிகள் நாட்டுடைமை, மன்னர் மானியம் ஒழிப்பு போன்ற முற்போக்கான திட்டங்கள் கொண்டு வரப்பட்டபோது, அவர்கள் பக்கம் இருந்த பழமைவாதிகளே அதனை எதிர்த்த நிலையில், அவை நிறைவேற துணை நின்ற இயக்கம்தான் தி.மு.க.,

    அதுபோலவே 1980-ம் ஆண்டு இந்தியாவில் நிலையான ஆட்சி அமைவதற்கு காங்கிரசால்தான் முடியும் என்றபோது, அதற்கு முந்தைய தேர்தலில் பெருந்தோல்வி அடைந்து இருந்த இந்திராகாந்தி அரசியல் களத்தில் மீண்டு வருவாரா? என்ற கேள்வி எழுந்த சூழலில், “நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சி தருக...” என முழங்கி அது வெற்றிகரமாக நிறைவேற துணை நின்றவர் தலைவர் கருணாநிதி.


    2004-ம் ஆண்டு மதசார்பற்ற ஜனநாயக ஆட்சி அமைந்திட வேண்டும் என்ற நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் தலைமையை ஏற்பது குறித்து அரசியல் அரங்கில் விவாதங்கள் நடந்தபோது, “இந்திராவின் மருமகளே வருக... இந்தியாவின் திருமகளே வெல்க..” என முதன் முதலாக அவர் பக்கம் நின்று முழங்கியவர் தலைவர் கருணாநிதி.

    அதன் பின்னர்தான், அகில இந்திய கட்சிகள் பலவும் அணிவகுத்தன. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

    தயக்கத்தை உடைத்து, மயக்கத்தைத் தெளிவித்து, மதவெறியின் பிடியிலிருந்து நாடு விடுபட்டு ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட வேண்டுமென்றால் இன்றைய நிலையில் இந்திய தேசிய காங்கிரசின் இளந்தலைவர் ராகுல்காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டி உள்ளது. பாசிசத்தை எதிர்த்து நிற்கும் ஜனநாயகப் படையினை ஒருங்கிணைத்து நெறிப்படுத்த வலுவான தலைமை என்ற அடிப்படையில்தான் ராகுல்காந்தியை முன்மொழிந்து உள்ளேன்.

    மதவெறியை வீழ்த்த வேண்டும் என்ற உணர்வு கொண்ட தோழமை சக்திகள் இதனைப் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தற்போதைய சூழலில் இதுகுறித்து தோழமைக் கட்சிகளுக்குள் விவாதங்கள் ஏற்படலாம். ஜனநாயகத்தில் விவாதங்கள் வழியேதான் விடிவுகள் பிறந்து உள்ளன.

    மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் இருண்டு கொண்டிருக்கும் இந்தியா விடிவு பெற இந்த விவாதங்கள் கூட நல்ல விளைவுகளை உண்டாக்கும். ஜனநாயகம் காத்திட ராகுலின் கரத்தை வலுப்படுத்துவோம். நாசக் கரத்தை வீழ்த்திட நேசக் கரங்களாய் இணைவோம்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். #DMK #MKStalin #Congress #RahulGandhi
    Next Story
    ×