search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா ரத்தத்தில் பிரச்சனைக்குரிய அறிகுறிகள் இல்லை- அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம்
    X

    ஜெயலலிதா ரத்தத்தில் பிரச்சனைக்குரிய அறிகுறிகள் இல்லை- அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம்

    ஜெயலலிதாவின் ரத்தத்தில் பிரச்சனைக்குரிய அறிகுறிகள் எதுவும் இல்லை என்று அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம் அளித்துள்ளார். #Jayalalithaa #JayaDeathProbe #ApolloHospital
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் ரத்தவியல் துறை மருத்துவர் பிரபு, தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் அசோக்குமார் ஆகியோர் நேற்று ஆஜராகினர்.

    ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது பல்வேறு காலகட்டங்களில் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவு, சிவப்பு, வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை போன்ற பல்வேறு பரிசோதனை முடிவுகளை மருத்துவர் பிரபு ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளார். அதன்படி, ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.


    இதுதொடர்பாக மருத்துவர் பிரபு வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு ‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்ததாக பேசப்பட்டு வரும் நிலையில், ‘ஜெயலலிதா உடலில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தத்தில் ஏதேனும் மாறுபாடுகள் இருப்பது பரிசோதனை மூலம் தெரிந்ததா?’ என்று பிரபுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர், ‘சந்தேகப்படும்படியான மாறுதலோ, பிரச்சனைக்குரிய அறிகுறிகளோ ரத்தத்தில் இல்லை’ என்று பதில் அளித்தார். ரத்தத்தில் பாக்டீரியா கலந்ததன் மூலம் நோய் தொற்று ஏற்பட்டு ஜெயலலிதாவுக்கு இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டதாக அப்பல்லோ தரப்பில் அளிக்கப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவர் பிரபு, ரத்தத்தில் பாக்டீரியா கண்டறியப்படவில்லை என்றும், சிறுநீரில் தான் பாக்டீரியா கண்டறியப்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.

    மருத்துவர் அசோக்குமார் தீவிர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த போது, ஜெயலலிதாவுக்கு 4 நாட்கள் மட்டும் சிகிச்சை அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வாக்குமூலம் அளித்தார். #Jayalalithaa #JayaDeathProbe #ApolloHospital #ArumugasamyInquiryCommission
    Next Story
    ×