search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்
    X

    கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்

    கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    பெரம்பலூர்:

    திருக்கார்த்திகை தீப திருவிழா, வருகிற 23-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பொதுமக்கள் தங்களது வீடுகளில் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த நிலையில் பெரம்பலூர் தாலுகா குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் அகல் விளக்கு தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் பாளையம், சிறுவாச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் மண்பாண்ட தொழிலாளர் குடும்பத்தினர், காலங்காலமாக அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் அகல்விளக்குகள் தரமாக இருப்பதால், பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர். குறிப்பாக அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் அதிக அளவில் ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர். இதனால் இப்பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களாக இடை விடாது இரவும், பகலும் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து மண்பாண்ட தொழிலாளி பாளையம் கீழ வீதியை சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி முத்துலட்சுமி கூறியதாவது:- நாங்கள் பரம்பரையாக செய்து வரும் மண்பாண்ட தொழிலில், முன்பு சக்கரத்தை பயன்படுத்தி வந்தோம். தற்போது களிமண்ணை பயன்படுத்தி, கிரைண்டர் மூலம் தயாரிக்கிறோம். தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டால் தொழிலும் பாதிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்கிறோம். இரவும், பகலும் வேலை செய்தால், ரூ.500 வரை கிடைக்கும். தற்போது அந்த அளவுக்கு வருமானம் கிடைப்பதில்லை. ஏரியில் இருந்து களிமண் கொண்டு வர, ஒரு லோடுக்கு ரூ.3 ஆயிரம் வரை கொடுக்க வேண்டியுள்ளது. மின்சார கட்டணமும் உயர்ந்துள்ளது.

    மூலப்பொருட்கள் விலையும் அதிகரித்துள்ளது. இருப்பினும், திருக்கார்த்திகையையொட்டி, ஏராளமான வியாபாரிகள் எங்களை நம்பி ஆர்டர் கொடுக்கின்றனர். இதற்காக அகல் விளக்கு தயாரிக்க அதிகமாக உழைக்கிறோம். ஆனால், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. ஆகவே, மண்பாண்ட தொழிலை பாதுகாக்க, எங்களுக்கு இலவச மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவித்தொகை மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன், மாறுபட்ட வேகத்துடன் கூடிய சீலாவில் மின்சக்கரங்கள் கொடுக்க வில்லை. எனவே அதனை வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்களில் தீபம் ஏற்றுவதற்கும் அனுமதிக்க வேண்டும். அப்போது தான் எங்கள் தொழில் சிறப்பாக நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவில் கோபுர விளக்கு செய்யும் அதே பகுதியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி பிச்சை கூறுகையில், அகல் விளக்கு தயாரிக்கும் தொழிலில் தற்போது போதிய வருமானம் கிடைப்பதில்லை. இதனால் அடுத்து வரும் தலைமுறையினர் இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு விரும்பம் இல்லாமல் இருக்கின்றனர். கிடைக்கின்ற மற்ற வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர். இந்த தொழிலை நசுங்காமல் பாதுகாக்க தொழிலாளர்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து கொடுக்க வேண்டும். இதில் அதிக அளவு வருமானம் கிடைக்கவில்லை என்றாலும் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த வேலையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறேன் என்றார்.
    Next Story
    ×