search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karthigai festival"

    • கார்த்திகை திருவிழாவில் சொக்கப்பனை எரிக்கப்பட்டது.
    • இதில் டிரஸ்டி சேதுமாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சத்திரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தி யப்பட்ட முத்துமாரியம்மன் கோவில், இந்த பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு திருக்கார்த்திகை திருவிழா விமரிசையாக நடந்தது. நேற்று இரவு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சுவாமி, மயில்

    வாகனத்தில் மாடுகள் பூட்டிய தேரில் கோவிலை வலம் வந்தது.

    பின்னர் கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு, சுவாமி முன்பு சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நாடார் உறவின்முறை முறைகாரர் பாபுசெல்வக்கனி, அம்பலகாரர் சக்திவேல் மற்றும் டிரஸ்டிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதே போல் கவுரவ உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட காமாட்சி அம்மன் கோவில் முன்பும் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் டிரஸ்டி சேதுமாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பரக்கலக்கோட்டையில் உள்ள பொது ஆவுடையார் கோவிலில் கார்த்திகை கடைசி சோமவார விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ளது பரக்கலக்கோட்டை கிராமம். இங்கு உள்ள பொதுஆவுடையார் கோவில், பிரசித்திபெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாகும்.

    இந்த கோவிலில் சிவபெருமான், ஆலமரமாக காட்சி தருகிறார். இந்த கோவில் இறைவனுக்கு மத்தியபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. மற்ற கோவில்களை போல இக்கோவிலின் நடை அனைத்து நாட்களிலும் திறக்கப்படுவது இல்லை.

    ஒவ்வொரு திங்கட்கிழமைதோறும் நள்ளிரவு மட்டுமே நடை திறக்கப்படுகிறது. ஆண்டுதோறும் தை மாதம் 1-ந் தேதி பொங்கல் பண்டிகை நாளில் மட்டுமே இக்கோவிலின் நடை பகலில் திறந்து இருப்பதை காண முடியும்.

    மற்ற நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலின் கதவு முன்பாக வழிபாடு செய்கிறார்கள். ஆடு, கோழி, தேங்காய், நெல் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் இந்த கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


    பொது ஆவுடையார் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய தேங்காய்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த காட்சி.

    ஆல மரத்தையே ஆலயமாக போற்றி வணங்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை சோமவார விழா கடந்த மாதம்(நவம்பர்) 19-ந் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் நள்ளிரவில் நடை திறக்கப்பட்டு பொது ஆவுடையாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கடைசி சோமவார விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து தங்களது வயலில் சாகுபடி செய்யப்பட்ட நெல், உளுந்து மற்றும் தேங்காய், ஆடு, கோழி மற்றும் தானியங்களை காணிக்கையாக வழங்கி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நெல், மலை போல குவித்து வைக்கப்பட்டிருந்ததை படத்தில் காணலாம்.

    பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நெல் கோவில் வளாகத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அதேபோல தேங்காய்களும் அதிகளவு குவிந்தன.

    விழாவையொட்டி பொது ஆவுடையார் கோவிலுக்கு வேதாரண்யம், மன்னார்குடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பேராவூரணி உள்பட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சம்பத்குமார், பரம்பரை அறங்காவலர்கள் சடகோபராமானுஜம், ராமானுஜம் மற்றும் பரக்கலக்கோட்டை கிராம மக்கள் செய்து இருந்தனர். 
    திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராகு தலம் நாகநாதர் கோவில் உள்ளது. இந்திரன், சூரியன் வழிபட்டு பேறு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கார்த்திகை கடைஞாயிறு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று காலை கொடி மரத்து சிறப்பு ஹோமம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளை கேவில் தலைமை அர்ச்சகர் நாகராஜகுருக்கள், அர்ச்சகர்கள் ஸ்ரீதரன், உமாபதி, சங்கர், சரவணன், செல்லப்பா ஆகியோர் நடத்தினர். பின்னர் பஞ்சமூர்த்திகள் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள், மகா தீபாராதனையும், 45 அடி உயர பிரமாண்ட மாலையும் அணிவிக்கப்பட்டு

    கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வருகிற 6-ந் தேதி(வியாழக்கிழமை) திருக்கல்யாணம், 8-ந் தேதி(சனிக்கிழமை) தேரோட்டமும், 9-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) சூர்ய புஷ்கரணியில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரியும் நடக்கிறது. அன்று கோவில் குளத்தில் திரளான பக்தர்கள் புனித நீராடுகிறார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம், மேலாளர் ராஜேந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்து உள்ளனர்.
    கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    பெரம்பலூர்:

    திருக்கார்த்திகை தீப திருவிழா, வருகிற 23-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பொதுமக்கள் தங்களது வீடுகளில் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த நிலையில் பெரம்பலூர் தாலுகா குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் அகல் விளக்கு தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் பாளையம், சிறுவாச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் மண்பாண்ட தொழிலாளர் குடும்பத்தினர், காலங்காலமாக அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் அகல்விளக்குகள் தரமாக இருப்பதால், பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர். குறிப்பாக அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் அதிக அளவில் ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர். இதனால் இப்பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களாக இடை விடாது இரவும், பகலும் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து மண்பாண்ட தொழிலாளி பாளையம் கீழ வீதியை சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி முத்துலட்சுமி கூறியதாவது:- நாங்கள் பரம்பரையாக செய்து வரும் மண்பாண்ட தொழிலில், முன்பு சக்கரத்தை பயன்படுத்தி வந்தோம். தற்போது களிமண்ணை பயன்படுத்தி, கிரைண்டர் மூலம் தயாரிக்கிறோம். தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டால் தொழிலும் பாதிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்கிறோம். இரவும், பகலும் வேலை செய்தால், ரூ.500 வரை கிடைக்கும். தற்போது அந்த அளவுக்கு வருமானம் கிடைப்பதில்லை. ஏரியில் இருந்து களிமண் கொண்டு வர, ஒரு லோடுக்கு ரூ.3 ஆயிரம் வரை கொடுக்க வேண்டியுள்ளது. மின்சார கட்டணமும் உயர்ந்துள்ளது.

    மூலப்பொருட்கள் விலையும் அதிகரித்துள்ளது. இருப்பினும், திருக்கார்த்திகையையொட்டி, ஏராளமான வியாபாரிகள் எங்களை நம்பி ஆர்டர் கொடுக்கின்றனர். இதற்காக அகல் விளக்கு தயாரிக்க அதிகமாக உழைக்கிறோம். ஆனால், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. ஆகவே, மண்பாண்ட தொழிலை பாதுகாக்க, எங்களுக்கு இலவச மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவித்தொகை மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன், மாறுபட்ட வேகத்துடன் கூடிய சீலாவில் மின்சக்கரங்கள் கொடுக்க வில்லை. எனவே அதனை வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்களில் தீபம் ஏற்றுவதற்கும் அனுமதிக்க வேண்டும். அப்போது தான் எங்கள் தொழில் சிறப்பாக நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவில் கோபுர விளக்கு செய்யும் அதே பகுதியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி பிச்சை கூறுகையில், அகல் விளக்கு தயாரிக்கும் தொழிலில் தற்போது போதிய வருமானம் கிடைப்பதில்லை. இதனால் அடுத்து வரும் தலைமுறையினர் இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு விரும்பம் இல்லாமல் இருக்கின்றனர். கிடைக்கின்ற மற்ற வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர். இந்த தொழிலை நசுங்காமல் பாதுகாக்க தொழிலாளர்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து கொடுக்க வேண்டும். இதில் அதிக அளவு வருமானம் கிடைக்கவில்லை என்றாலும் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த வேலையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறேன் என்றார்.
    ×