search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறைபிடிக்கப்பட்ட விஏஓ
    X
    சிறைபிடிக்கப்பட்ட விஏஓ

    தனது வீட்டிற்கு மட்டும் ஜெனரேட்டர்- பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையாளரை கண்டித்து பொதுமக்கள் மறியல்

    தனது வீட்டிற்கு மட்டும் ஜெனரேட்டர் வைத்து குடிநீர், மின்சார வசதியை ஏற்படுத்திய நகராட்சி ஆணையாளரை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். #GajaCyClone
    பட்டுக்கோட்டை:

    கஜா புயலின் கோர தாண்டவத்தில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகரம் சின்னாபின்னாமகி உள்ளது. பட்டுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இன்று வரை மின்சாரம் இல்லை. இதனால் பல கிராமங்கள் இருள் சூழந்து கிடக்கிறது. மேலும் குடிநீர் பிரச்சினையும் தலைவிரித்தாடுகிறது. லட்சக்கணக்கான தென்னை மரங்களும் சாய்ந்து விட்டதால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

    இதற்கிடையே அதிகாரிகள் எந்த பகுதிக்கும் வந்து மக்களை சந்திக்கவில்லை. நிவாரண உதவிக்கான எந்த கணக்கெடுப்பு பணியும் செய்யவில்லை. குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை செய்து தராமல் உள்ளனர் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையாளராக இருந்து வருபவர் அலாவுதீன் இவர் பட்டுக்கோட்டை சிவக்கொல்லை பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கஜா புயலால் பட்டுக்கோட்டை நகரில் எந்த பகுதியிலும் குடிநீர் வினியோகமோ மின்சாரமோ இல்லை. இதனால் மக்கள் தவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே நகராட்சி ஆணையாளர் அலாவுதீன் தனது வீட்டுக்கு மட்டும் ஜெனரேட்டர் மூலம் குடிநீர், மின்சார வசதியை ஏற்படுத்தி கொண்டார். மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்காமல் இருந்து வந்துள்ளார் என கூறப்படுகிறது.

    இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை நகராட்சி ஆணையாளர் அலாவுதீன் வீட்டு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கிராம நிர்வாக அலுவலர் காமராஜ், விரைந்து வந்தார். அப்போது அவரிடம் கிராமமக்கள், கஜா புயலால் எந்த நிவாரண உதவியும் கிடைக்கவில்லை. நகராட்சி ஆணையாளரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வரவில்லை என்று குமுறலுடன் கூறினர்.

    இதைகேட்ட கிராம நிர்வாக அலுவலர் காமராஜ் கூறும்போது, இறந்தால் மட்டும்தான் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார். அவரது இந்த பேச்சை கேட்டு பொதுமக்கள் மேலும் ஆத்திரம் அடைந்தனர். இதனால் கிராம நிர்வாக அலுவலர் காமராஜை, சிறைபிடித்தனர். பின்னர் அவரை அமர்ந்து வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து பட்டுக்கோட்டை போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×