search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக வனப்பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டிய கேரள கும்பல் கைது
    X

    தமிழக வனப்பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டிய கேரள கும்பல் கைது

    தமிழக வனப்பகுதியில் குப்பைக்கழிவுகளை கொட்டிய கேரள கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் குமுளி மலைச்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கம்பம் மேற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் அதிக அளவு குப்பைக் கழிவுகள் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பொதுமக்களிடம் விசாரித்த போது கேரள பகுதியான குமுளியில் ஏராளமான ஓட்டல், லாட்ஜ்கள் உள்ளன. இங்கிருந்தும் குடியிருப்பு பகுதியில் இருந்தும் அதிக அளவு குப்பைகளை தமிழக வனப்பகுதியில் கொட்டிச் செல்வதாக ஆதங்கம் தெரிவித்தனர். எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட எஸ்.பி. உத்தரவிட்டார்.

    அதன்படி தனிப்படை போலீசார் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசு போக்குவரத்து கழக பணிமனை பின்புறம் வனப்பகுதியில் 2 பேர் குப்பைகளை கொட்டியுள்ளனர்.

    அவர்களை மடக்கி பிடித்த போலீசார் விசாரித்ததில் அந்த நபர்கள் குமுளியைச் சேர்ந்த வர்க்கீஸ் (வயது 53), ரபீக் (20) என தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கையில், வனப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வனத்துறையினருடன் இணைந்து கண்காணித்து வருகின்றனர்.

    குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×