search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையம் பகுதியில் சாலையில் திரியும் மாடுகள் பறிமுதல் செய்யப்படும்- தாசில்தார் எச்சரிக்கை
    X

    ராஜபாளையம் பகுதியில் சாலையில் திரியும் மாடுகள் பறிமுதல் செய்யப்படும்- தாசில்தார் எச்சரிக்கை

    ராஜபாளையத்தில் விபத்தை ஏற்படுத்தும் வகையில், சாலைகளில் மாடுகள் திரிய விட்டால், மாடுகள் பறிமுதல் செய்யப்படும் என தாசில்தார் தெரிவித்தார்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வட்டாட்சியர் ராமச்சந்திரன் உள்ளிட்ட வருவாய் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

    பள்ளி வளாகத்திற்குள் மழை நீர் தேங்காத வண்ணம் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும், குடிநீர் சேமித்து வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டிகள் மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி முறையாக சுத்தம் செய்யப்பட்டு வைரஸ் தடுப்பு மருந்து கலக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

    மேலும் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் குறித்தும், அவற்றை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தும்படி ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டனர். வாரம் ஒரு சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    ராஜபாளையத்தில் விபத்தை ஏற்படுத்தும் வகையில், சாலைகளில் மாடுகள் திரிய விட்டால், மாடுகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளதாக தாசில்தார் தெரிவித்தார்.

    ராஜபாளையத்தில் உள்ள சாலைகளில் பசு மாடுகள் ஆங்காங்கே திரிந்து வருகின்றன. குறிப்பாக தென்காசி சாலை, மதுரை சாலை, சங்கரன் கோவில் சாலை, முடங்கியாறு சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக மாடுகள் திரிந்து வருகின்றன.

    இதன் காரணமாக வார சந்தை நாட்களான செவ்வாய், வியாழன் போன்ற நாட்களில் நாள் முழுவதும் காந்தி சிலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படும். மேலும் பள்ளி நேரங்களிலும், பண்டிகை காலங்களிலும் பஸ்நிலையம் மற்றும் தென்காசி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    இந்த சாலைகளில் மாடுகள் சுதந்திரமாக திரிவதால், இரு சக்கர வாகனங்களில் செல்வோர், அடிக்கடி சிறு விபத்துகள் ஏற்படுவது சகஜமாகி விட்டது. மாடுகளை கட்டி வைத்து வளர்க்க வலியுறுத்தி பலமுறை மாடுகளின் உரிமையாளர்ளிடம் தெரிவித்தும் அவர்கள் இது வரை மாடுகளை கட்டி வைப்பதில்லை.

    எனவே இனி மாடுகளை சாலையில் திரிய விட்டால், மாடு பிடிக்கும் பயிற்சி பெற்ற நபர்கள் மூலம் மாடுகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதிக்குள் கொண்டு விடவும், மாடுகளின் உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும், மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக, வட்டாட்சியர் ராமச்சந்திரன் தெரிவித்தார். #tamilnews
    Next Story
    ×