search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் - அரியலூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்
    X

    பெரம்பலூர் - அரியலூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்

    பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
    பெரம்பலூர்:

    இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2019 அன்று தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் வருகிற 31-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெற ஆணையிட்டுள்ளது.

    அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடிகளிலும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றது. இதில் குன்னம் தாலுகா பேரளி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி மற்றும் சித்தளி அரசு நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமினை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

    பின்னர் கலெக்டர் கூறுகையில், கடந்த மாதம் 1-ந்தேதி முதல் கடந்த 4-ந்தேதி வரை நடைபெற்ற சிறப்பு முகாமில் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பெயர் சேர்த்தலுக்காக 7 ஆயிரத்து 668 நபர்களும், பெயர் நீக்கலுக்காக 111 பேர்களும், திருத்தம் மேற்கொள்வதற்காக 3 ஆயிரத்து 196 பேர்களும், முகவரி மாற்றத்திற்காக 528 நபர்களும் மனுக்களை வழங்கியுள்ளனர் என்றார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், குன்னம் தாசில்தார் சிவா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

    இதே போல் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதில் வாலாஜாநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் பெரியநாகலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு, விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி ஆய்வு நடத்தினார். அரியலூர் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், தாசில்தார் முத்துலெட்சுமி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் வருகிற 13-ந்தேதி வாக்காளர் பட்டியலில் தொடர்புடைய பாகம் மற்றும் பிரிவை அந்தந்த கிராம சபைகளில் படித்து பெயர்களைச் சரிபார்க்கும் பணியும், வருகிற 14-ந்தேதி அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் சிறப்பு முகாமும் நடைபெற உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4-ந்தேதி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×