search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் சார்பனாமேட்டில் அரசுப்பள்ளியில் 2 டி.வி.க்கள் திருட்டு
    X

    வேலூர் சார்பனாமேட்டில் அரசுப்பள்ளியில் 2 டி.வி.க்கள் திருட்டு

    வேலூர் சார்பனாமேட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வகுப்பறையின் பூட்டை உடைத்து 2 டி.வி.க்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
    வேலூர்:

    வேலூர் சார்பனாமேட்டில் ரீபால் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக சையத் கலீம்அகமத் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இங்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு அதிகளவு மாணவர்கள் சேர்க்கும் நோக்கத்தோடு ‘ஸ்மார்ட்’ வகுப்பறை தொடங்கப்பட்டது. அப்போது 2 எல்.இ.டி. டி.வி.க்கள் வாங்கப்பட்டன. அவற்றின் மூலம் ஆசிரியர்கள் எளிய முறையில் மாணவர்களுக்கு புரியும்படி பாடம் நடத்தி வந்தனர்.

    மேலும் மாணவ-மாணவி களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு அரிய பொருட்கள் பள்ளியில் வாங்கி வைக்கப்பட்டுள்ளன.

    இப்பள்ளியில் நேற்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதையொட்டி நேற்று காலை 8 மணியளவில் பள்ளி தலைமையாசிரியர் சையத் கலீம்அகமத் பள்ளிக்கு வந்தார். அங்கு ‘ஸ்மார்ட்’ வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு வகுப்பறை சுவரில் பொருத்தப்பட்டிருந்த 2 எல்.இ.டி. டி.வி.க்களையும் மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து அவர் வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து எல்.இ.டி. டி.வி.க்களை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் சையத் கலீம்அகமத் கூறுகையில், ‘திருட்டை தடுக்க இப்பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. கடந்தாண்டு பள்ளியின் பின்பகுதி வழியாக மாடிக்கு வந்த மர்மநபர்கள் கண்காணிப்பு கேமராக்களில் தங்கள் உருவம் பதியக்கூடாது என்பதற்காக வெள்ளை தாள்களை ஒட்டி, பின்னர் அவற்றை திருடி சென்றனர்.

    தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் பள்ளியின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகளை பதிவு செய்யும் கருவியையும் (ஹார்ட் டிஸ்க்), மற்றும் 2 டி.வி.க்களையும் திருடி சென்றனர். இந்த நிலையில் 3-வது முறையாக இப்பள்ளியில் மர்மநபர்கள் புகுந்து வகுப்பறையின் பூட்டை உடைத்து 2 எல்.இ.டி. டி.வி.க்களை திருடி சென்று உள்ளனர். பள்ளியில் தொடர்ந்து திருடும் மர்மநபர்களை உடனடியாக பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
    Next Story
    ×