search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டியில் 17 ஆண்டுகளுக்கு பிறகு நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்பட்டது
    X

    ஊட்டியில் 17 ஆண்டுகளுக்கு பிறகு நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்பட்டது

    17 ஆண்டுகளுக்கு பிறகு நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் மலை ரெயில் ஊட்டி-கேத்தி இடையே இயக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    ஊட்டி:

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சேலம் கோட்ட ரெயில்வே சார்பில், ‘ஜாய் ரைடு’ என்ற பெயரில் பாரம்பரியம் மிக்க நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் இயங்கும் சிறப்பு மலை ரெயில் ஊட்டி-கேத்தி இடையே நேற்று இயக்கப்பட்டது. கடந்த 1908-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி முதல் ஊட்டி-குன்னூர் இடையே மலை ரெயில் இயக்கம் தொடங்கப்பட்டது. 1914-ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் உருவாக்கப்பட்ட நிலக்கரி நீராவி என்ஜின் 1918-ம் ஆண்டு தென்னக ரெயில்வேயில் சேர்க்கப்பட்டது.



    அந்த காலத்தில் வெளிநாடுகள் மற்றும் நீலகிரியில் மலை ரெயில் நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் இயக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சில காரணங்களால் நீராவி என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதனால் நூற்றாண்டு பழமை வாய்ந்த நீராவி என்ஜின் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து பாரம்பரியம் மிக்க நீராவி என்ஜினை மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து நீராவி என்ஜின் குன்னூருக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து கேத்திக்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. நீராவி என்ஜின் கேத்தி சென்று மீண்டும் குன்னூருக்கு வந்தது. சோதனை ஓட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, அந்த நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் சிறப்பு மலை ரெயில் நேற்று இயக்கப்பட்டது. முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு என இரண்டு பெட்டிகளில் 80 இருக்கைகளுக்கு நேற்று காலையிலேயே டிக்கெட் எடுக்கப்பட்டு விட்டது.

    மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை நினைவுகூறும் வகையில், திட்டத்தின் குறியீடு குறித்த தொப்பிகள் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டது. நீராவி என்ஜின் ஊட்டி ரெயில் நிலையத்துக்கு வந்ததும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் இருக்கைகளில் ஏறி அமர்ந்தனர். இந்த மலை ரெயிலை ஆர்.கணேஷ் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் தொழில்நுட்ப பொறியாளர் முத்துகிருஷ்ணன், ஊட்டி ரெயில் நிலைய அதிகாரி பிரமோத், பாரம்பரிய நீராவி ரத அறக்கட்டளை தலைவர் நடராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ஊட்டியில் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பாரம்பரியம் மிக்க நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் இயங்கும் மலை ரெயில் லவ்டேல் வழியாக கேத்தி சென்றடைந்தது. பின்னர் அங்கு ½ மணி நேரம் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகு மற்றும் கேத்தி ரெயில் நிலையத்தை கண்டு ரசித்தனர். அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. பின்னர் அந்த ரெயில் ஊட்டி ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. ஊட்டி-கேத்தி இடையே மலை ரெயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் நூற்றாண்டு பழமை வாய்ந்த நிலக்கரி நீராவி என்ஜினின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். கடந்த 2000-ம் ஆண்டு பல்வேறு காரணங்களால் ஊட்டியில் நிலக்கரி நீராவி என்ஜின் இயக்கம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று நீராவி என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×