search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mountain Rail"

    நீலகிரி மாவட்டம் முழுவதும் தற்போது மேக மூட்டம் அதிகமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் 2 நாட்கள் நீலகிரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட, கொடநாடு, பந்தலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    ஊட்டி, குன்னூரில் நேற்று இரவு மழை பெய்தது. மழை காரணமாக ஊட்டிக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் 2 நாட்கள் நீலகிரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறி உள்ளார்.

    இது குறித்து அவர் கூறும் போது, நீலகிரி மாவட்டம் முழுவதும் தற்போது மேக மூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வாகனங்களை இயக்கி வருபவர்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடும் என்பதால் 2 நாட்கள் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அடர்ந்த வன பகுதி வழியாக செல்லும் இந்த ரெயிலில் சுற்றுலா பயணிகள் அதிக அளவு பயணம் செய்வார்கள்.

    தற்போது ஊட்டியில் பெய்து வரும் மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக மலை ரெயில் சேவை 3 நாட்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    ஊட்டி - குன்னூர் சாலை தலையாட்டு மந்து பகுதியில் சாலை அகலப்படுத்தப்பட்ட இடத்தில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. மேலும் பன்சிட்டி பகுதியில் தடுப்பு சுவர் கட்டப்பட்ட இடத்தில் ஒரு வீட்டின் அருகே மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

    ஊட்டி-குன்னூர் சாலையில் அரசு பஸ்கள் உள்ளிட்ட கன ரக வாகனங்கள் செல்வதால் அதிர்வு காரணமாக சாலை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    அங்கு மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கிறது. இரு புறங்களிலும் ஒவ்வொரு வாகனமாக செல்ல அனுமதிக்கப்படுகிறது.

    இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நிற்பதால் இதனை கடந்து செல்ல 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    மழை காரணமாக பாதிப்பு ஏற்படும் இடங்களில் சீரமைப்பு பணிகளை மேற் கொள்ள அரக்கோணத்தில் இருந்து வந்துள்ள பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

    குன்னூரில் பெய்த மழையால் சிங்கார தோப்பு, பாபு கிராமம், லூர்துபுரம் ஆகிய இடங்களில் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது.

    இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த மலை காய்கறிகளான கேரட், முள்ளங்கி, பீட்ரூட் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    திருப்பூர், உடுமலை, அவினாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

    உடுமலையை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்கு அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.

    கோவிலின் அடிவாரத்தில் இருந்து சற்று உயரத்தில் அடர்ந்த வன பகுதியில் பஞ்சலிங்க அருவி இருக்கிறது. மேற்கு தொடர்சி மலை பகுதியில் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

    இந்த வெள்ளம் அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தது. இதனால் கோவிலில் பூஜைகள் ரத்து செய்யப்பட்டது.திருமூர்த்தி மலையில் மலை வாழ் மக்கள் வசிக்கும் செட்டில் மெண்ட் பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் அவதி அடைந்தனர்.

    கோவையிலும் நேற்று இரவு பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
    17 ஆண்டுகளுக்கு பிறகு நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் மலை ரெயில் ஊட்டி-கேத்தி இடையே இயக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    ஊட்டி:

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சேலம் கோட்ட ரெயில்வே சார்பில், ‘ஜாய் ரைடு’ என்ற பெயரில் பாரம்பரியம் மிக்க நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் இயங்கும் சிறப்பு மலை ரெயில் ஊட்டி-கேத்தி இடையே நேற்று இயக்கப்பட்டது. கடந்த 1908-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி முதல் ஊட்டி-குன்னூர் இடையே மலை ரெயில் இயக்கம் தொடங்கப்பட்டது. 1914-ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் உருவாக்கப்பட்ட நிலக்கரி நீராவி என்ஜின் 1918-ம் ஆண்டு தென்னக ரெயில்வேயில் சேர்க்கப்பட்டது.



    அந்த காலத்தில் வெளிநாடுகள் மற்றும் நீலகிரியில் மலை ரெயில் நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் இயக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சில காரணங்களால் நீராவி என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதனால் நூற்றாண்டு பழமை வாய்ந்த நீராவி என்ஜின் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து பாரம்பரியம் மிக்க நீராவி என்ஜினை மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து நீராவி என்ஜின் குன்னூருக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து கேத்திக்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. நீராவி என்ஜின் கேத்தி சென்று மீண்டும் குன்னூருக்கு வந்தது. சோதனை ஓட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, அந்த நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் சிறப்பு மலை ரெயில் நேற்று இயக்கப்பட்டது. முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு என இரண்டு பெட்டிகளில் 80 இருக்கைகளுக்கு நேற்று காலையிலேயே டிக்கெட் எடுக்கப்பட்டு விட்டது.

    மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை நினைவுகூறும் வகையில், திட்டத்தின் குறியீடு குறித்த தொப்பிகள் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டது. நீராவி என்ஜின் ஊட்டி ரெயில் நிலையத்துக்கு வந்ததும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் இருக்கைகளில் ஏறி அமர்ந்தனர். இந்த மலை ரெயிலை ஆர்.கணேஷ் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் தொழில்நுட்ப பொறியாளர் முத்துகிருஷ்ணன், ஊட்டி ரெயில் நிலைய அதிகாரி பிரமோத், பாரம்பரிய நீராவி ரத அறக்கட்டளை தலைவர் நடராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ஊட்டியில் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பாரம்பரியம் மிக்க நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் இயங்கும் மலை ரெயில் லவ்டேல் வழியாக கேத்தி சென்றடைந்தது. பின்னர் அங்கு ½ மணி நேரம் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகு மற்றும் கேத்தி ரெயில் நிலையத்தை கண்டு ரசித்தனர். அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. பின்னர் அந்த ரெயில் ஊட்டி ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. ஊட்டி-கேத்தி இடையே மலை ரெயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் நூற்றாண்டு பழமை வாய்ந்த நிலக்கரி நீராவி என்ஜினின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். கடந்த 2000-ம் ஆண்டு பல்வேறு காரணங்களால் ஊட்டியில் நிலக்கரி நீராவி என்ஜின் இயக்கம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று நீராவி என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×