search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் பன்றிக்காய்ச்சலுக்கு தாசில்தார் பலி- பொதுமக்கள் பீதி
    X

    கோவையில் பன்றிக்காய்ச்சலுக்கு தாசில்தார் பலி- பொதுமக்கள் பீதி

    கோவையில் பன்றிக்காய்ச்சலுக்கு தாசில்தார் பலியாகி இருப்பது நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. #swineflu
    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு குடியிருப்பை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (வயது 47). கார்கில் போரில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த 10 ராணுவ வீரர்களில் இவரது தம்பி செய்யது சத்தாரும் ஒருவர்.

    உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் அப்துல்ரகுமானுக்கு நீலகிரி மாவட்ட வருவாய் துறையில் வேலை வழங்கப்பட்டது.

    இவர் துறைரீதியாக தேர்வு எழுதி தாசில்தாராக பதவி உயர்வு பெற்றார். கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், அரசு கேபிள் டிவி தாசில்தாராகவும் பணியாற்றினர்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அப்துல் ரகுமான் கோத்தகிரி ஆதிதிராவிடர் நலத்துறையில் நிலம் எடுப்பு பிரிவில் தாசில்தாராக மாற்றப்பட்டார். அங்குள்ள அரசு குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 27-ந் தேதியில் இருந்து அப்துல் ரகுமான் அதிகப்படியான சளி, இருமலால் பாதிக்கப்பட்டு அவதியடைந்தார். இதற்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் சரியாகவில்லை.

    இதையடுத்து அப்துல் ரகுமானை அவரது குடும்பத்தினர் கடந்த 29-ந் தேதி கோவைக்கு அழைத்து வந்து ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது அப்துல் ரகுமானுக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அப்துல் ரகுமானுக்கு நோயின் வீரியம் குறையவில்லை. இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து அப்துல் ரகுமானை நேற்று முன்தினம் இரவு கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தனர்.

    அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பு பிரிவில் உரிய சிகிச்சை பெற்று வந்த அப்துல்ரகுமான் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அப்துல் ரகுமான் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    பன்றிக்காய்ச்சலுக்கு பலியான அப்துல்ரகுமானின் சொந்த ஊர் மேட்டுப்பாளையம். இவரது தந்தை சலாம் மின்வாரியத்தில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். அப்துல் ரகுமானுக்கு ரகுமத் நிஷா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு குன்னூரை சேர்ந்த வசந்தா என்ற பெண் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானார். இந்த நிலையில் தாசில்தார் அப்துல்ரகுமானும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலருக்கு பன்றிக்காய்ச்சல் பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    தாசில்தார் அப்துல் ரகுமானின் குடும்பத்தினருக்கு நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு உள்ளதா என பரிசோதித்து அதை தடுப்பதற்கான மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.

    இதே போல் அப்துல் ரகுமான் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியிலும் சுகாதாரத்துறையினர் பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்துல் ரகுமான் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு வந்து சில நாட்கள் தங்கி உள்ளார்.

    இதையடுத்து நீலகிரி மாவட்ட சுகாதாரதுறை அதிகாரிகள் மூலம் கோவை மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மேட்டுப்பாளையத்திலும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

    நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் பொற்கொடி கூறியதாவது:-

    பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு காரணமாக தாசில்தார் அப்துல் ரகுமான் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நீலகிரி மாவட்டம் முழுவதும் பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சளி, இருமல் அறிகுறியுடன் கடந்த சில நாளில் வந்து சிகிச்சை பெற்றவர்கள் யார் என விபரங்கள் தருமாறு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். #swineflu
    Next Story
    ×