search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்புவனத்தில் தலையாரி மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி - மணல் கடத்திய 11 பேர் சிக்கினர்
    X

    திருப்புவனத்தில் தலையாரி மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி - மணல் கடத்திய 11 பேர் சிக்கினர்

    திருப்புவனம் அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற தலையாரியை லாரி ஏற்றி கொல்ல முயன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மணல் கடத்தல் தொடர்பாக மேலும் 10 பேர் சிக்கினர்.
    திருப்புவனம்:

    திருப்பாச்சேத்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது கொத்தன்குளம் கிராமம். இங்குள்ள கண்மாயின் கரையை சேதப்படுத்தி மணல் அள்ளுவதாக திருப்புவனம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் திருப்புவனம் தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த்துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு மணல் அள்ளிக் கொண்டிருந்த சில நபர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். உடனே தலையாரி மலைச்சாமி அந்த லாரிகளை நிறுத்த முயன்றார். அப்போது அவர் மீது லாரியை மோதுவது போல் சென்றனர். இதில் நிலை தடுமாறி தலையாரி கீழே விழுந்து காயம் அடைந்தார்.

    இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் சுகன்யா கொடுத்த புகாரின் பேரில் திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் திருப்பாச்சேத்தி அருகே உள்ள இந்திரா நகரைச் சேர்ந்த காளஸ்வரன், ரவி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து காளஸ்வரனை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    பூவந்தி அருகே திருப்புவனம் தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அனுமதியில்லாமல் கிராவல் மண் அள்ளி வந்த 4 லாரிகளை அதிகாரிகள் பிடித்து தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் இது தொடர்பாக லாரி உரிமையாளர்களான திருச்சியைச் சேர்ந்த சரவணன், சிவச்சந்திரன், சங்கர், தர்மர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதேபோல் திருப்புவனத்தை அடுத்த மணலூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 லாரிகளை போலீசார் மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் ராஜா, பூமி ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்குடி அருகே கொத்தரிவிலக்கு பகுதியில் பள்ளத்தூர் போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை போலீசார் மறித்து சோதனை செய்தனர். இதில் மேட்டுக் குடிப்பட்டியைச் சேர்ந்த சந்திரன் (வயது 30) என்பவர் லாரியில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து லாரி பறிமுதல் செய்யப்பட்டது. சந்திரன் கைது செய்யப்பட்டார்.
    Next Story
    ×